ஆயிரம் சந்தேகங்கள்: நிதியமைச்சர் சொல்வது போல் லாபம் கிடைக்குமா?
என் நம்பகமான குடும்ப நண்பர்களில் ஒருவரின் அறிமுகத்தின் வாயிலாக, 'பீர் - டு - பீர்' கடன் திட்டத்தை அறிந்தேன். நானும் என் கணவரும் அதில் தலா 5 லட்சம் முதலீடு செய்தோம். முதல் 7 மாதங்கள் குறிப்பிட்ட தொகை கிடைத்தது. அதன் பின்னர் அவர்கள் தொகையை பெரிதும் குறைத்து தருகின்றனர். தயவு செய்து எங்கள் முதலீட்டை மீட்க உதவவும்.பெயர் வெளியிட விரும்பாத வாசகி
தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். தெரியாத, புரியாத முதலீட்டு இனங்களில் இறங்காதீர்கள் என்று அவ்வப்போது, இந்த ஆயிரம் சந்தேகங்கள் பகுதியில் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். யாரோ நம்பகமான குடும்ப நண்பர் என்று சொல்கிறீர்கள். பீர் - டு - பீர் கடன் கொடுப்பதில் உள்ள சிக்கல்களை அவர் உங்களுக்கு எடுத்து சொல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது. பீர்-டு -பீர் என்றால், அந்தக் காலத்தில் நண்பர்களிடையே, தெரிந்தவர்கள் இடையே கைமாற்றாக பணம் கொடுத்து, திரும்ப வாங்கிக் கொள்ளும் நடைமுறையைப் போன்றது.பொதுவாக, வெளியே வங்கிகள் வாயிலாக கடன் கிடைக்காதவர்கள், அந்த அளவுக்கு தங்களுடைய கிரெடிட் ரேட்டிங்கை உயர்த்திக் கொள்ளாதவர்கள், சிறு வணிகர்கள் போன்றோர் நாடும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று. இதன்படி, பணத்தை கேட்கும் யாரோ ஒருவருக்கு நீங்கள் கடன் கொடுக்கிறீர்கள். அதற்கு உதவி செய்யும் ஒரு வலைதளம் வாயிலாகவே இது நடைபெற்றிருக்கும். அவரது முகமோ, நம்பகத்தன்மையோ உங்களுக்கு தெரியாது. கடன் வாங்கியவர் எப்போது திரும்ப தருவாரோ, அப்போது தான் உங்கள் பணம் முழுமையாக திரும்ப வரும் அல்லது வராமலும் போகலாம்.இடையில் இந்த பரிவர்த்தனைக்கு பாலமாகச் செயல்படும் வலைதளங்கள் உங்கள் பணத்துக்கோ, அது ஈட்டித் தரும் என்று சொல்லப்படும் லாபத்துக்கோ எந்த உத்தரவாதமும் அளிக்காது; பொறுப்பேற்கவும் செய்யாது. உங்கள் முதலீடு முழுமையாக திரும்பினால், அது உங்கள் அதிர்ஷ்டம் தான்.ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 10 சதவீதம் ரிட்டர்ன் தருகிறேன் என்று வெளியான விளம்பரத்தை பார்த்து முதலீடு செய்தேன். மூன்று மாதங்களுக்கு வட்டி வந்தது. அதன் பின்னர் வட்டியும் அனுப்பவில்லை; முதலீட்டையும் திருப்பித் தரமாட்டேன் என்கிறார் அந்த நபர். எங்கே புகார் கொடுப்பது? என்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும்? எல்லா பரிவர்த்தனைகளையும் 'நெப்ட்' வாயிலாகவே செய்திருக்கிறேன்.ஸ்ரீநிவாசன், சென்னைநீங்கள் பணத்தை 'நெப்ட்' வாயிலாக அனுப்பி இருப்பதால், சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுக்கலாம். அதற்கான சுட்டி இது: https://cybercrime.gov.in/ உங்களை போல் நிறைய பேர் ஏமாற்றப்பட்டிருந்தால், எழும்பூரில் இருக்கும் பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளிக்கலாம்.இவையெல்லாம் உங்கள் மன நிம்மதிக்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால், போன பணம் திரும்பி வருவது அரிது. அதீத வட்டி கொடுக்கிறேன் என்று சொல்லும் தனிநபரை நம்பி எப்படி முதலீடு செய்கிறீர்கள் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. இன்னும் கூடுதல் கவனத்தோடும், எச்சரிக்கை உணர்வோடும் இருந்திருக்கலாமே?நான் ஒரு பொதுத்துறை வங்கியில் காசாளராக வேலை பார்க்கிறேன். முற்றிலும் பார்வையற்றவன்; இன்னும் கல்யாணம் ஆகவில்லை; சொந்த வீடும் இல்லை. நான் எப்படி சேமித்தால், என்னிடம் ஓய்வு காலத்திற்கு தேவையான பணம் இருக்கும்?சங்கர், திருநெல்வேலிமற்றவர்களை விட, உங்களுக்கு சிக்கல்கள் கூடுதலாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. நீங்கள் திருமணம், வீடு போன்றவை வேண்டும் என்று ஆசைப்படுவது உங்கள் கேள்வியில் இருந்து புரிகிறது.இவற்றுக்கு ஆகும் செலவுகளை கணக்கிட்டு, தனித் தனியாக ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை சேமித்து வாருங்கள். ஓய்வு காலத்துக்கும் தனியே ஒரு தொகையை ஒதுக்கி வையுங்கள்.நீங்கள் வங்கி பணியாளர் என்பதால், தேசிய பென்ஷன் திட்டத்தில் ஏற்கனவே இணைந்திருப்பீர்கள்.இந்த தொகைகளை மியூச்சுவல் பண்டுகளில் உள்ள மல்டி அசெட், ஹைப்ரிட், ப்ளெக்ஸி கேப் பண்டுகளில் மாதாமாதம் எஸ்.ஐ.பி., வாயிலாக முதலீடு செய்யுங்கள். உங்கள் வயது என்னவென்று குறிப்பிடாததால், இவற்றை எத்தனை ஆண்டுகள் தொடர வேண்டும் என்று சொல்ல முடியவில்லை.மியூச்சுவல் பண்டு வாயிலாக பங்குச் சந்தையை பற்றி தெரிந்து கொண்டு, பின்னர் பங்கு முதலீட்டிலும் இறங்குங்கள். உங்களது ஓய்வு காலத்தில் என்னவிதமான இடர்களை சந்திக்க வேண்டி யிருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை. அவை எல்லாவற்றுக்கும் அருமருந்தாக இருக்கப் போவது சேமிப்புகள் தான். உங்கள் வருவாயில் 25, 30 சதவீதத்தை சேமிப்பாக மாற்றுங்கள்.நம் நிதி அமைச்சர், 22,000 ரூபாய் செலுத்தி கணக்கை துவங்கினால், முதல் மாதம் 15 லட்சம் உங்கள் வங்கி கணக்கில் வந்து சேரும்; 4 மாதங்களில் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும் என்று சொல்வதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பதிவு வலம் வருகிறது. அதில் வரும் எஸ்.பி.ஐ., அஞ்சலகம் போன்றவற்றில் விசாரித்தால், அப்படி ஒரு ஸ்கீம் இல்லை என்கின்றனர். இதில் எப்படி உறுப்பினராக சேரலாம்; பணம் எப்படி எங்கே கட்ட வேண்டும்?எம்.சி. தினகர், சென்னைஇது இன்னொரு நிதி மோசடி. ஏ.ஐ., கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ அது. இதேபோல் முகேஷ் அம்பானி வீடியோ ஒன்றும் வளைய வருகிறது. நிதி அமைச்சர் அப்படிப்பட்ட திட்டம் எதையும் தெரிவிக்கவில்லை. சமூக வலைதளங்களில் வருவதை நம்பக்கூடாது என்ற, ஒரு பானை சோற்றுக்கு இந்த ஒரு பருக்கை உதாரணம்.வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ் gmail.com, ph 98410 53881