ஆயிரம் சந்தேகங்கள் : கேன்சல் செய்த காசோலையை கேட்பது ஏன்?
தற்சமயம் தங்க முதலீட்டுப் பத்திரத்துக்கான அறிவிப்பு இல்லாத நிலையில், தங்கத்தில் முதலீடு செய்ய சிறந்த வழி எது? தங்க காசுகளாக வாங்கலாமா? ஆன்லைனில் கமாடிட்டியில் முதலீடு செய்யலாமா? அல்லது வேறு சிறந்த வழிகள் உண்டா?
பா.பாலச்சந்தர், சென்னை.கையில் பணம் இருக்கும் போதெல்லாம் தங்க காசுகள் வாங்கி வைத்துக்கொள்ளலாம். தங்க இ.டி.எப்., அல்லது தங்க மியூச்சுவல் பண்டுத் திட்டங்களில் முதலீடு செய்து வைக்கலாம். கமாடிட்டி டிரேடிங் என்பது ஊக வணிகம். அது சொத்து அல்ல. தங்கத்தோடு வெள்ளியும் வாங்கி வையுங்கள். அதன் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. எங்கள் ஊரில் உள்ள வங்கிகளில், பாதுகாப்பு பெட்டக வசதி நீண்ட காலமாக முயன்றும் கிடைக்கவில்லை. நகைகளை வங்கியில் வைத்து கடன் பெற்று, வேறு எதிலாவது முதலீடு செய்யலாமா?
சீதாலட்சுமி, மதுரை.இது நல்ல உத்தி இல்லை. முதலில் நகையை அடகு வைப்பது என்பது, அதைப் பாதுகாப்பதற்கான வழிமுறை அல்ல. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டும். அது தேவையற்ற தொந்தரவு, சுமை. மேலும், அந்தப் பணத்தைக் கொண்டுபோய் இன்னொரு இடத்தில் முதலீடு செய்வது என்பது, இன்னொரு விஷப்பரீட்சை. உங்களுக்குத் தேவை பாதுகாப்பு பெட்டக வசதி தானே? பல தனியார் நிறுவனங்களும் பெட்டக வசதி கொடுக்கின்றன. இன்றைக்கு ஆர்.பி.ஐ., தேசிய அளவில் பெட்டக வசதி வழங்கும் வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு கடுமையான நடைமுறை விதிகளை விதித்துள்ளது. அதனால், காலங்காலமாக பெட்டக வசதி வழங்கும் தனியார் நிறுவனங்களில் உங்கள் நகைகளை வைத்துக்கொள்ளலாம். நான் ஒரு தகவல் தொழில்நுட்ப ஊழியர். இப்பொழுது அமெரிக்காவில் புதிய அதிபர் பதவி ஏற்க இருக்கும் நிலையில், அந்நாட்டின் பங்குகள் வாங்குவது நல்ல பலன்கள் கிடைக்குமா?
ஆர்.சுதாகர், செங்கல்பட்டு.பல இடர்கள் என் கண்களுக்குத் தெரிகின்றன. முதலில், அங்கே வட்டி விகிதத்தை மேலும் குறைக்க வேண்டும். ஆனால், தற்போது அமெரிக்காவில் இருந்து வரும் செய்திகள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை. முன்பு திட்டமிட்டது போன்று, வட்டி விகிதங்கள் வேகமாக குறைக்கப்படாது என்று சொல்லப்படுகிறது. இரண்டு, டிரம்ப், அங்கே பெரும்பாலான நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 சதவீதமும், சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 60 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்போகிறேன் என்று சொல்கிறார். இதனால் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அனுமதி இல்லாமல் வாழும் குடியேறிகளை, வெளியேற்றுவதும் டிரம்ப் திட்டத்தில் உள்ளது. அவர்கள் தான் அமெரிக்காவின் உழைப்புக் கூலிகள். அவர்கள் வெளியேற்றப்பட்டால், உழைப்பதற்கான கரங்கள் குறைந்துவிடும். பணவீக்கம் மேலும் உயர்ந்துவிடும். இவற்றை எல்லாம் பார்க்கும்போது, 'நல்ல பலன்' கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. ஆனால், உங்கள் ஆசையை நான் கெடுக்க விரும்பவில்லை. மொத்த பணத்தையும் அமெரிக்காவில் போடாதீர்கள். உங்கள் போர்ட்போலியோவில் 10 சதவீதம் வரை, அமெரிக்கப் பங்குகளில் போட்டுப் பாருங்கள். யார் கண்டது? உங்கள் அதிர்ஷ்டம், அமெரிக்கச் சந்தைகள் கொட்டியும் கொடுக்கலாம். என் கணவர் கிரிப்டோவில் முதலீடு செய்துள்ளார். தற்போது மிகவும் சரிந்து உள்ளது மார்க்கெட். இந்த நிலை மாறுமா? இது சரியான முதலீடா? இது நம்பகத்தன்மை உடையதா?
கவிதா, கோவை.மற்ற முதலீடுகளை விட மிக அதிக ரிஸ்க் உடையது, கிரிப்டோ முதலீடு. உயர்த்தினால், வானளவுக்கு உயர்த்தும். வீழ்த்தினாலோ, சுவடே தெரியாமல் பாதாளத்தில் தள்ளி விடும். எழுந்துகொள்ளவே முடியாது. இதில், ஜாக்கிரதையான முதலீடு என்று எதுவும் இல்லை. சரியான முதலீடா என்றால் நிச்சயம் இல்லை. நம்பகத்தன்மைக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். கிரிப்டோவில் இருந்து வளர்ச்சி கிடைத்தால், மகிழ்ச்சி. அப்படி நடக்கவில்லை என்றால், பெரிய பாதிப்புகள் இல்லாமல், சிறு சிராய்ப்புகளோடு மீண்டும் வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான அளவு, இதர முதலீடுகளை உங்கள்கணவர் செய்துள்ளாரா என்பதை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். எஸ்.ஐ.பி., முறையில் பங்குச் சந்தையில் 10 ஆண்டுகளாக மாதம் ரூபாய் 5,000 முதலீடு செய்து வருகிறோம். தேவைப்படும்போது, உதாரணமாக கார், பைக் வாங்க, திருமணச் செலவுக்கு என்று அதிலிருந்து பணம் எடுக்கலாமா? எங்கள் முகவர், இதற்கெல்லாம் இப்போது இதிலிருந்து பணம் எடுக்க வேண்டாம். எதிர்கால வாழ்க்கைக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். என்ன செய்வது?
டி.அனுசூயா, மின்னஞ்சல்.பரவாயில்லை, உங்கள் முகவர் தங்கமானவர். உங்களை நீண்டகால அளவில் யோசிக்கச் சொல்கிறார். நல்லது தான். ஆனால், உங்களுடைய உடனடி ஆசைகளையும், தேவைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதுஅவசியமில்லை. ஏற்கனவே முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி.,யில் கை வைக்காதீர்கள். கார், பைக் வாங்க, திருமண செலவு செய்ய என்று தனித்தனியே இலக்குகள் நிர்ணயித்துக் கொண்டு, அதற்கேற்ப எஸ்.ஐ.பி.,யின் வாயிலாக முதலீடு செய்து வாருங்கள். குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த ஆசைகளையும் நீங்கள் 'ஜாம், ஜாம்' என்று நிறைவேற்றிக்கொள்ளலாம். ஒரு சில வங்கியில் கடன்கோரும் போதும், காப்பீட்டு நிறுவனத்தில் பாலிசியை சரண்டர் செய்யும் போதும், மேற்படி நிர்வாகங்கள் கேன்சல் செய்த காசோலையை கோருகின்றனர். இது எதற்காக?
ரோ.சு.சத்தியமூர்த்தி, திருவள்ளூர்.வாடிக்கையாளர், உண்மையிலேயே வங்கியில் கணக்கு வைத்திருக்கிறாரா என்பதைக் கடன் கொடுக்கும் நிறுவனம் உறுதி செய்துகொள்ள வேண்டாமா? ஏதோ ஒரு வங்கியின் பெயர், கணக்கு எண் கொடுத்து ஏமாற்றிவிட்டால் என்ன செய்வது? அவர் பின்னால் போய் நின்று எப்படிக் கடனை வசூல் செய்வது? காசோலையில், கணக்கு வைத்திருப்பவரைப் பற்றிய ஏராளமான செய்திகள் இருக்கின்றன. அவற்றைப் பதிவு செய்துகொள்வது, கடன் கொடுக்கும் நிறுவனங்களுக்கு அவசியம். இவர்களைப் பார்த்து, காப்பீடு, மற்றும் ஒரு சில வங்கிச் சேவைகளிலும் இந்த காசோலையைக் கேட்கிறார்கள். விபரங்களைத் தவறாக பதிவுசெய்துவிடாமல் இருப்பதற்காக, முன்னெச்சரிக்கையாக இப்படிச் செய்கிறார்கள்.வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ் gmail.com ph: 98410 53881