சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் அதிரடிகாங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு... ஆயுள் தண்டனை!
புதுடில்லி, டில்லியில், 1984ல் நடந்த சீக்கியருக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சஜ்ஜன் குமாருக்கு, 79, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பிரதமராக இருந்த காங்.,கின் இந்திரா, 1984ல் சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, டில்லியின் பல இடங்களில் சீக்கியருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்தன.இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக விசாரித்த நானாவதி கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், 2,733 பேர் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, 587 எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.இதில், 240 எப்.ஐ.ஆர்.,கள், கண்டுபிடிக்க முடியவில்லை என்று முடித்து வைக்கப்பட்டன. மேலும், 250 எப்.ஐ.ஆர்.,களில், அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மொத்தத்தில், 28 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இவற்றில், 400 பேர் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், 50 பேர் மீது மட்டுமே கொலை உள்ளிட்ட பிரிவுகளில் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது, 20 வழக்குகள் டில்லி நீதிமன்றங்களில் விசாரணை நிலையில் உள்ளன.சீக்கியருக்கு எதிரான வன்முறையைத் துாண்டியதாக, காங்கிரசின் முன்னாள் எம்.பி.,யான சஜ்ஜன் குமார் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த 1984 நவ., 12ல் பாலம் காலனியில், ஐந்து சீக்கியர் கொலை தொடர்பான வழக்கில் அவருக்கு, உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்துள்ள வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இதைத் தவிர, மேலும் இரண்டு வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும், இரண்டு வழக்குகள் விசாரணை நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், 1984 நவ., 1ல் டில்லி சரஸ்வதி நகரில் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த டில்லி சிறப்பு நீதிமன்றம், சஜ்ஜன் குமார் குற்றவாளி என, கடந்த 12ம் தேதி அறிவித்தது. இந்த வழக்கில் அவருக்கான தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது.இந்த வழக்கில் அதிகபட்சம் மரண தண்டனை விதிக்க முடியும். மரண தண்டனை விதிக்கக்கூடிய வழக்கில் குற்றவாளிகளின் மனநலம் தொடர்பான மருத்துவ அறிக்கையை பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மருத்துவ அறிக்கை பெறப்பட்டது.சஜ்ஜன் குமாருக்கு மரண தண்டனை விதிக்க மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், சஜ்ஜன் குமாரின் வயது, அவருக்கு உள்ள நோய் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் அதை நிராகரித்தது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், சஜ்ஜன் குமார் தற்போது திஹார் சிறையில் உள்ளார்.
வழக்கு கடந்து வந்த பாதை
1991: எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது1994 ஜூலை 8: வழக்கில் தண்டிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக டில்லி நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், குற்றப்பத்திரிகையில் சஜ்ஜன் குமார் பெயர் இல்லை2015 பிப்., 12: சிறப்பு விசாரணை குழுவை மத்திய அரசு அமைத்தது2016 நவ., 21-: வழக்கில் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக சிறப்பு விசாரணை குழு, நீதிமன்றத்தில் தெரிவித்தது2021 ஏப்., 6 : சஜ்ஜன் குமார் கைது செய்யப்பட்டார்2021 மே 5: குற்றப்பத்திரிகையை போலீஸ் தாக்கல் செய்தது2024 ஜன., 31 : நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவங்கியது2024 நவ., 8 : விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு2025 பிப்., 12 : சஜ்ஜன் குமார் குற்றவாளியாக அறிவிப்பு2025 பிப்., 25 : சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
நீதியின் சக்கரம் சுழல
துவங்கியுள்ளது: பா.ஜ.,காங்., முன்னாள் எம்.பி., சஜ்ஜன் குமாருக்கு டில்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியதை பா.ஜ., வரவேற்றுள்ளது. இதுகுறித்து பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் கூறுகையில், “சீக்கியருக்கு எதிரான கலவரம் என்பது, சீக்கிய இனத்தையே அழிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட தாக்குதல். இது, சாதாரண வழக்கு அல்ல; எனவே, இவ்வழக்கில் குற்றவாளியான சஜ்ஜன் குமாருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு மாற்றாக, துாக்கு தண்டனை கிடைக்க செய்யும் வகையில் சி.பி.ஐ., மேல்முறையீடு செய்ய வேண்டும்,” என்றார். இதேபோல் பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா கூறுகையில், “முன்னாள் பிரதமர் ராஜிவின் நெருங்கிய நண்பராக இருந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக நீதியின் சக்கரம் சுழல துவங்கியுள்ளது,” என்றார்.