உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கே.ஆர்.எஸ்., அணையில் 1.55 லட்சம் கனஅடி நீர் திறப்பு: 310 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்

கே.ஆர்.எஸ்., அணையில் 1.55 லட்சம் கனஅடி நீர் திறப்பு: 310 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெலகாவி: கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் ஏழு ஆறுகளில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கால், 310 கிராமங்களுக்கு வெள்ள அபாய பீதி ஏற்பட்டு உள்ளது. கோகாக் நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, வினாடிக்கு 1.55 லட்சம் கனஅடி நீர் திறந்து உள்ளதால், காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. குறிப்பாக வடமாவட்டமான பெலகாவியில் கடந்த சில தினங்களாக, கனமழை கொட்டி தீர்க்கிறது. அண்டை மாநிலமான மஹாராஷ்டிராவிலும் கனமழை பெய்வதால், அங்கு உள்ள கொய்னா உள்ளிட்ட அணைகளில் இருந்து, தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதனால் பெலகாவியில் ஓடும் வேதகங்கா, துாத்கங்கா, மல்லபிரபா, கட்டபிரபா, கிருஷ்ணா, மார்க்கண்டேயா, ஹிரண்யகேஷி ஆகிய 7 ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள 30 தரைப்பாலங்கள் மூழ்கியதால், கிராமங்களுக்கு இடையிலான இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

முதியவர் பலி

நிப்பானி தாலுகா ஹொன்னரகே கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. கிராமத்தில் வசித்த மக்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சங்கேஸ்வரா டவுனில் உள்ள சங்கேஸ்வர் கோவிலை மழைநீர் சூழ்ந்தது. முட்டு அளவுக்கு தேங்கி நிற்கும் தண்ணீரில் நின்று, அர்ச்சகர்கள் பூஜை செய்தனர்.நிப்பானி கரடகா கிராமத்தில் உள்ள, பங்காளி பாவா தர்கா பாதி அளவு மூழ்கியது. ஹிரண்யகேஷி ஆற்றின் வெள்ளத்தால், கோகாக் நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வீடுகளில் இருந்து மக்களை வெளியேற்ற அதிகாரிகள் தயாராகி உள்ளனர். வீட்டிற்குள் மழைநீர் புகுந்த அதிர்ச்சியில் தசரதா பண்டி, 80 என்ற முதியவர் மாரடைப்பால் இறந்தார்.

ஆற்றுப்பாலம் மூழ்கியது

பெலகாவி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும், மக்களை தங்க வைக்க, மாவட்ட நிர்வாகம் 427 முகாம்களை திறந்து வைத்து உள்ளது. இந்த முகாம்களில் தங்கும் மக்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்று, கலெக்டர் முகமது ரோஷன் அறிவுறுத்தி உள்ளார்.யாத்கிர் நாராயணபுரா கிராமத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே உள்ள, பசவசாகர் அணைக்கு 2,90,042 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3,03,925 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் யாத்கிர் கொல்லுார் எம் கிராமத்தில் உள்ள, ஆற்றுப்பாலம் மூழ்கியது.கிருஷ்ணா ஆற்றின் வெள்ளத்தால் பாகல்கோட் மாவட்டத்தின் ஜமகண்டி, முதோல் தாலுகாக்களில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டது. மக்கள் பொருட்களை மூட்டை, மூட்டையாக கட்டி கொண்டு வீடுகளை காலி செய்தனர். கால்நடைகளையும் அழைத்து சென்றனர்.பல்லாரி துங்கபத்ரா அணையில் இருந்து வினாடிக்கு 1,17,691 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. துங்கபத்ரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஹம்பியில் உள்ள புராதன சின்னங்கள் மூழ்கின.

வெள்ள அபாய பீதி

49.45 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ்., அணையின் நீர்இருப்பு 48.30 அடியாக உள்ளது. நேற்று இரவு 8:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,22,021 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 1,31,234 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால், சாம்ராஜ்நகர் கொள்ளேகால் அருகே பழைய ஹம்பாபுரா கிராம மக்களுக்கு வெள்ள அபாய பீதி ஏற்பட்டு உள்ளது.ரயில்கள் ரத்துபெங்களூரு நகரில் மழை பெய்யாவிட்டாலும், நகரின் பலத்த காற்று வீசியது. ரிச்மென்ட் சதுக்கத்தில் மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்ததில், டிரைவர் திவாகர், 42 கால் முறிந்தது. கெம்பேகவுடா நகர் கங்கேனஹள்ளியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பைக்கில் சென்ற ககன், 38, அவரது மகன் யுவா, 10 காயம் அடைந்தனர். அத்திகுப்பே ஹம்பிநகரில் மரம் விழுந்ததில் கார் முற்றிலும் சேதம் அடைந்தது. குயின்ஸ் ரோட்டிலும் இரண்டு கார்கள் மீது மரம் விழுந்தது.ஹாசன் சக்லேஸ்பூர் பகுதியில் பெய்யும் கனமழையால், எடகுமரி - கடகரவள்ளி இடைப்பட்ட ரயில் பாதையில் பல இடங்களில், மண்சரிந்து விழுந்து உள்ளது. இதனால் பெங்களூரு - கண்ணுார் ரயில் வண்டி எண்:16511; பெங்களூரு - கார்வார் 16595 ரயில் இன்றும்; கண்ணுார் - பெங்களூரு ரயில் 16512 இன்றும், நாளையும்; கார்வார் - பெங்களூரு ரயில் 16596 இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - முருடேஸ்வரா ரயில் 16585 இன்று; முருடேஸ்வரா - பெங்களூரு ரயில் 16586 நாளை ரத்து செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

TSRSethu
ஜூலை 28, 2024 19:06

இவ்வளவு தண்ணீரோடு எவ்வளவு மணல் வரும் யோசியுங்கள். விவசாயிகளை விட மணல் வியாபாரிகள் அவர்களால் பயனடைவோர் மிக்க மகிழ்ச்சியடைவர். விவசாயிகளும் ஜூன் 12 திறக்க வேண்டியதை இப்போதாவது வரும் என மகிழ்ச்சி அடைவர். ஆனாலும் தண்ணீர் வேண்டும் என கர்நாடகவிடம் பேச மாட்டோம்.


Kumar
ஜூலை 28, 2024 14:43

கடல் பரப்பு நிலப் பரப்பை விட மிக அதிகம். கடலிலும் அதிக மழை பொழியும். கடற்கரை ஓரம் அதிக நீரை ஆழ் துளை கிணறு மூலம் உறிவதால் மட்டுமே கடல் நீர் உள்ளே புகும். இதுல RO System விளக்கம் வேற .


Arun
ஜூலை 28, 2024 12:18

மேட்டூர் கீழ் அணை கட்ட உகந்த இடம் எதுவும் இல்லை . தடுப்பணை மட்டுமே கட்ட முடியும் .


sundarsvpr
ஜூலை 28, 2024 11:33

கர்நாடக அரசு மேக தாது ஆணை கட்ட முயல்கிறது. அந்த மாநிலத்திற்கு சாதகமாய் இருக்கும். கரநாடகாவைவிட தமிழ்நாட்டில் பாசன நிலங்கள் அதிகம். நீர் தேவை அதிகம் . தமிழ்நாடு அரசு ஏன் ஆணை கட்டக்கூடாது? நவம்பர் டிசம்பர் மாதங்களில் கொட்டும் மலையில் பயிர்நிலங்களில் நீர் தேங்குவதுடன் கடலில் வீணாய் கலக்கிறது. நமக்கு அதிகம் நீர் தேவை சம்பா சாகுபடி என்பதனை கவனத்தில் கொள்தல் நல்லது.


Kasimani Baskaran
ஜூலை 28, 2024 07:21

எப்படியோ இந்த சீசனில் மழை அதிகமென்பதால் தண்ணீரை தாராளமாக திறந்துவிட்டு கோட்டாவை நிறைவு செய்து விடுவார்கள். திராவிடமும் தண்ணீர்ப்பிரச்சினையில் இருந்து விடுவிக்கப்படும். திரும்பவும் லேபல் ஒட்டுவதில் கவனம் செலுத்தலாம்.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 28, 2024 11:31

மழை அதிகம் பெய்வதே, அந்த அதிகமழை நீர் கடலுக்கு செல்வதற்குத்தான்... அதனை மனிதப் பதர்களாகிய நீங்கள் சேர்த்து வைத்துக் கொண்டால்... கடலில் அந்நீரை அனுப்பா விட்டால்... கடல்நீரின் உப்புத்தன்மை... நிலத்தில் ஊறி... நிலம் முழுவதும் உப்புநீர் பரவிவிடும்... இயற்கை, கடலின் உப்பு அதிகமாகவதை தடுக்கத்தான் அதிக மழையை கொடுக்கிறது... உபரி நீரை கடலில் விட்டால்தான்... நிலத்தில் வாழும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள்... கோடைக்காலத்தில் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியும்... மழை நீர் முழுவதையும்... உன்னைப் போன்ற மனிதன் பேராசையினால், சேமித்து வைத்தால்... கடலின் உப்புத்தன்மை அதிகமாகி... அது நிலத்திலும் சவ்வுடுபரவல் விதிப்படி பரவி... மனிதப் பதர்கள் குடிக்கவே தண்ணி இல்லாமல் சாக வேண்டியதுதான்... இந்த அடிப்படை அறிவுகூட உனக்கு இல்ல பார்... இதில் வேற அரசை குறை சொல்வது...?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை