உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 29 நக்சல்கள் சுட்டுக்கொலை பாதுகாப்பு படை அதிரடி சத்தீஸ்கரில் பதற்றம்

29 நக்சல்கள் சுட்டுக்கொலை பாதுகாப்பு படை அதிரடி சத்தீஸ்கரில் பதற்றம்

ராய்ப்பூர், சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.சத்தீஸ்கரில் உள்ள, 11 லோக்சபா தொகுதிகளுக்கும் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக வரும் 19ம் தேதி ஒரு தொகுதிக்கு மட்டும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.இந்நிலையில், சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தின் பினாகுண்டா கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் மாவட்ட ரிசர்வ் படையினருடன், எல்லை பாதுகாப்புப் படையினர் உட்பட மத்திய பாதுகாப்பு படையினர் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த 29 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதில், தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பின் மூத்த தலைவர் சங்கர் ராவும் கொல்லப்பட்டதை பாதுகாப்பு படையினர் உறுதி செய்தனர். இவரைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு, 25 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக மாநில அரசு அறிவித்திருந்தது. சம்பவ இடத்தில் நக்சல்கள் பயன்படுத்திய ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.நக்சல்களுடனான தாக்குதலில் இரண்டு எல்லை பாதுகாப்புப் படை வீரர்களும், மாவட்ட ரிசர்வ் படையைச் சேர்ந்த வீரர் ஒருவரும் காயம் அடைந்தனர். சக பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் நடந்த இந்த என்கவுன்டர் சத்தீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது. தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ