வெறி நாய் கடித்து 3 பசுக்கள் பலி: தொழிலாளர்கள் அச்சம்
மூணாறு : மூணாறு அருகே வெறிநாய் கடித்து மூன்று பசுக்கள் பலியானதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான பெரியவாரை எஸ்டேட் ஆனமுடி டிவிஷனில் கடந்த மூன்று நாட்களாக சுற்றித் திரியும் வெறி நாய் பசுக்கள், வளர்ப்பு நாய்கள் ஆகியவற்றை கடித்து குதறியது. அதில் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் தர்மராஜின் இரண்டு பசுக்கள், மாரிசாமியின் ஒரு பசு ஆகியவை இறந்தன. வளர்ப்பு நாய்கள் அதிகளவில் வெறி நாய் கடித்து பாதிக்கப்பட்டுள்ளன. வெறிநாயை பிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி மூணாறு ஊராட்சியில் தொழிலாளர்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் வீடுகளை விட்டு வெளியில் வரவும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவும் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.