36 வயது பெண் கூட்டு பலாத்காரம் ஹோட்டல் ஊழியர்கள் 3 பேர் கைது
கோரமங்களா: சாலையில் தனியாக நடந்து சென்ற 36 வயது பெண்ணை, கூட்டு பலாத்காரம் செய்த ஹோட்டல் ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு கோரமங்களா ஜோதி நிவாஸ் சந்திப்பு பகுதியில், ஒரு தனியார் கல்லுாரி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில், 36 வயது இளம்பெண் ஒருவர், சாலையில் தனியாக நடந்து சென்றார். அப்போது அந்த பெண்ணிடம், ஒருவர் நைசாக பேச்சு கொடுத்தார்.'என்னை உங்களுக்கு தெரியவில்லையா. நாம் இருவரும் இதற்கு முன்பு ஒரு முறை சந்தித்து இருக்கிறோமோ' என்று கூறினார். ஆனால் அந்த பெண்ணுக்கு, அந்த நபரை யார் என்றே தெரியவில்லை. ஆனாலும் அந்த நபர் பேசியதை நம்பினார்; அவரிடம் சகஜமாக பேசினார்.பின், சாப்பிட செல்வோம் என்று கூறி, பெண்ணை அருகில் இருந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்றார். இருவரும் உணவு சாப்பிட்ட பின், ஹோட்டல் மொட்டை மாடியில் நின்று பேசுவோம் என்று பெண்ணிடம் கூறினார். இதையடுத்து இருவரும் மொட்டை மாடிக்கு சென்றனர். அப்போது பெண்ணை அழைத்து சென்ற நபர் உட்பட நான்கு நபர்கள் சேர்ந்து பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர்.நேற்று அதிகாலை 4:30 மணிக்கு பெண்ணின் பர்ஸ், மொபைல் போனை பறித்துவிட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். வெளியே வந்த பெண், ஒருவரிடம் மொபைல் போனை வாங்கி போலீஸ் உதவி கட்டுப்பாட்டு எண் 112க்கு அழைத்து பேசி நடந்த சம்பவத்தை கூறினார்.அங்கு வந்த ஹொய்சாளா ரோந்து போலீசார், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர் நடத்திய பரிசோதனையில் அவர் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளானது தெரிந்தது.பெண் அளித்த புகாரில், ஹோட்டல் ஊழியர்களான மேற்கு வங்கம், உத்தர பிரதேசத்தை சேர்ந்த அஜித், 30, விஸ்வாஸ், 29, ஷிவு, 30 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அப்பெண்ணை, ரோட்டில் சந்தித்து பேசிய நபர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடுகின்றனர்.