| ADDED : ஆக 15, 2024 04:46 AM
தார்வாட், : காணாமல் போனதாக கருதப்பட்ட நபர், அவரது வீட்டிலேயே எலும்புக்கூடாக கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவர், இறந்து மூன்று ஆண்டுகளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.தார்வாட் நகரின் மால்மட்டி லே - அவுட்டைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 50. இவரது மனைவி, 2015ல் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மனைவி இறந்த பின், வீட்டில் சந்திரசேகர் மட்டும் தனியாக வசித்து வந்தார். யாருடனும் பேசுவது இல்லை. வீட்டின் உள்ளேயே முடங்கிக் கிடந்துள்ளார்.கடந்த 5ம் தேதி, சந்திரசேகரின் உறவினர் ஒருவர், தார்வாட் வித்யாகிரி போலீஸ் நிலையத்தில், 'சந்திரசேகரை காணவில்லை' என புகார் செய்தார். இது பற்றி போலீசார், பல இடங்களில் விசாரித்தனர். நேற்று முன்தினம் இரவு அவரது பாழடைந்து கிடந்த வீட்டுக்குச் சென்றனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கட்டிலில் சந்திரசேகர் எலும்புக்கூடாக இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த போலீசார், எலும்புக்கூடை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.'இவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. தற்கொலை செய்து கொண்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும்.எலும்புக்கூடை பார்த்தால், மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்திருக்கலாம்' என, போலீசார் தெரிவித்தனர்.சந்திரசேகர் வசித்த பாழடைந்த வீடு.