தங்கவயலில் தங்கச்சுரங்கம் மூடப்பட்ட பின், அரசின் நிலம் காலியாக இருப்பதை கர்நாடகா அரசு கவனத்தில் கொண்டது. ஏற்கனவே, பெமல் தொழிற்சாலையில் பயன்படுத்தாமல் இருந்த 1,000 ஏக்கர் நிலத்தை, கையகப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இதில், 972 ஏக்கர் நிலத்தை கர்நாடகா மாநில தொழில் வளர்ச்சி துறை பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. இதில், 100 ஏக்கரில் போலீஸ் பயிற்சி மையம் உட்பட தொழிற் பூங்கா அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாநகராட்சி
பெங்களூரு நகர வளர்ச்சித்துறை அமைச்சராக கே.ஜே.ஜார்ஜ், 2016ல் இருந்த போது, பெங்களூரு மாநகராட்சி பகுதிகளில் சேரும் குப்பைகளை அகற்றி, ராம்நகர், மாண்டியா, துமகூரு, கோலார் தங்கவயலில் கொட்ட திட்டமிடப்பட்டது.'குப்பைகள் கொட்டுவதற்காக, தங்கச்சுரங்கத்தின் 1,000 ஏக்கர் காலி நிலத்தை வாங்கி, அதில் 100 ஏக்கரில் குப்பைகள் கொட்டி, மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதனால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது. இது போன்று, அமெரிக்காவிலும் குப்பைகளில் இருந்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது' என்றார்.அதன்பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், இத்திட்டம் கைவிடப் பட்டது.இவரை தொடர்ந்து, அதே நகர வளர்ச்சித்துறையில் 2019ல் அமைச்சராக இருந்த ரோஷன் பெய்க்கும், பெங்களூரு குப்பைகளை, தங்கவயலில் கொட்டுவதற்கு ஆய்வு செய்ய வந்தார். தங்கவயலில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததால், குப்பைகள் கொட்டும் திட்டம் காணாமல் போனது.சமீபத்தில், பெங்களூரு நகர வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரு குப்பைகளை கொட்டுவதற்கு தேவையான இடத்தை கண்டறியுமாறு, கோலார் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடடார்.தங்கவயல் தாலுகாவில், தங்கச்சுரங்கத்திற்கு சொந்தமான 300 ஏக்கர் கண்டறியப்பட்டது.இதை, மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா, தாசில்தார் நாகவேணி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த இடம், புதியதாக அமைக்கப்பட்டு வரும் பெங்களூரு -- சென்னை விரைவு சாலை வழித்தடத்தின் அருகிலும், பெமல்- படமாக்கனஹள்ளி- பேத்தமங்களா பகுதியை ஒட்டியும் உள்ளது. வனவிலங்குகள்
இந்த இடத்தை, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். 300 ஏக்கர் நிலத்தில், 100 ஏக்கரில் மட்டுமே குப்பைகள் கொட்டப்படும்.மீதமுள்ள 200 ஏக்கரில் பசுமை மண்டலம், உரம் உற்பத்தி, மின் உற்பத்தி செய்யவும் ஒதுக்கப்படும். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. சுற்றுச்சூழல், பொது மக்களுக்கு எந்த பிரச்சனை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது. இப்பகுதி விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. எனவே வனவிலங்குகள் பாதுகாக்க வேண்டும் என வனத்துறை சார்பில் யோசனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு
பெங்களூரில் இருந்து தங்கவயல் தாலுகாவுக்கு குப்பை வருவதை அறிந்த கிராமவாசிகள், சமூக ஆர்வலர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தி உள்ளனர். தங்கவயலின் 35 வார்டுகளில் சேரும் குப்பைகள், பாரண்டபள்ளி குடியிருப்பு பகுதியில் கொட்டப் படுகிறது. இந்த குப்பை கிடங்கால் சுற்றுப்புறம் பாதிக்கப்படுகிறது. தங்கவயல் குப்பைகளை கொட்டவே மாற்று இடம் தேவை என்ற கோரிக்கை பலமாக இருந்து வரும் நிலையில், பெங்களூரு குப்பைகளை சுரங்க குடியிருப்பு பகுதிகளில் கொட்டுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.ஏற்கனவே, கூடங்குளம் அணு கழிவை தங்கவயலில் கொட்டும் திட்டம் இருந்தது. இதற்கும் தங்கவயலில் கடுமையான எதிர்ப்புகள் வலுத்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.- நமது நிருபர் -