சத்தீஸ்கரில் 31 நக்சல்கள் சுட்டுக்கொலை; சண்டையில் இரு வீரர்கள் வீர மரணம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில், 31 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் இருவர் வீர மரணம் அடைந்தனர்.சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் நக்சல்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க, அரசு தீவிர நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது.சத்தீஸ்கரில், நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக பீஜப்பூர் உள்ளது. இங்கு கடந்த 1ம் தேதி நடந்த என்கவுன்டரில், எட்டு நக்சல்கள் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரில் இந்த ஆண்டு மட்டும் நடந்த துப்பாக்கி சண்டையில், 81 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பீஜப்பூர் மாவட்டத்தின் இந்திராவதி தேசிய பூங்காவுக்கு உட்பட்ட வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து, ரிசர்வ் போலீஸ் படை மற்றும் சிறப்பு அதிரடி படையைச் சேர்ந்த 650க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு துவங்கிய தேடுதல் வேட்டை நேற்று காலையும் தொடர்ந்தது.அப்போது, பாதுகாப்பு படையினர் மீது நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில், 11 பெண்கள் உட்பட 31 நக்சல்கள் உயிரிழந்தனர். பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் வீர மரணம் அடைந்தனர். மேலும் இரு வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள், ஹெலிகாப்டரில் உடனடியாக ராய்ப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.உயிரிழந்த நக்சல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் ஏராளமான ஆயுதங்கள், வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அனைவருமே நக்சல்களுக்கான சீருடை அணிந்திருந்தனர். சண்டை நடந்த இடத்துக்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:அடுத்தாண்டு மார்ச்சுக்குள், சத்தீஸ்கரில் நக்சல்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவர் என ஏற்கனவே உறுதி அளித்துள்ளேன். அதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. சத்தீஸ்கர், நக்சல்கள் இல்லாத மாநிலமாக விரைவில் உருவாகும். சத்தீஸ்கர் மட்டுமல்ல, நாட்டில் எங்குமே நக்சல்கள் இருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.