உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலக்காடு அருகே ரயில் மோதி 4 தமிழர்கள் பலி

பாலக்காடு அருகே ரயில் மோதி 4 தமிழர்கள் பலி

பாலக்காடு: கேரள மாநிலம், சொரனுாரில் ரயில் மோதி தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். தமிழகத்தின், விழுப்புரத்தைச் சேர்ந்த 10 பேர், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் பகுதியில் தங்கி, சொரனுார் ரயில்வே ஸ்டேஷனில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.இவர்களில் லட்சுமணன், 50, வள்ளி, 45, ராணி, 45, மற்றொரு லட்சுமணன், 52, ஆகியோர், நேற்று மாலை, 3:05 மணிக்கு சொரனுார் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பாரதப்புழா ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில், ரயில் வரும் நேரம் என்பது தெரியாமல் பணியாற்றினர். அப்போது, பாலக்காட்டில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற, டில்லி - -திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில், நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதில், மூன்று பேரின் உடல்களை தண்டவாளத்தின் அருகில் இருந்து போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.லட்சுமணன், 50, என்பவரின் உடல் ஆற்றில் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தீயணைப்பு படையினர், போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், ஆற்றில் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இறந்தவர்கள் தொடர்பான கூடுதல் விபரங்கள் குறித்தும், விபத்து நடந்தது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ