டிரக் மீது கார் மோதி பெங்களூரின் 5 பேர் பலி
சித்ரதுர்கா : மேம்பாலம் அருகில், சாலை ஓரத்தில் நின்றிருந்த டிரக் மீது, கார் மோதியதில் அதில் பயணித்த ஐவர் உயிரிழந்தனர்.பெங்களூரை சேர்ந்த சிலர், பெலகாவி, சவதத்தி எல்லம்மா கோவிலுக்கு நேற்று முன்தினம் காரில் சென்றிருந்தனர். தரிசனம் முடிந்த பின், பெங்களுரூக்கு புறப்பட்டனர். நேற்று மதியம் 12:00 மணியளவில், சித்ரதுர்காவின் தேசிய நெடுஞ்சாலையில், தமடகல் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர்.அப்போது அதிவேகமாக சென்ற கார், சாலை ஓரம் நின்றிருந்த டிரக் மீது மோதியது. இதில் காரில் இருந்த சி.வி.ராமன் நகர் சிதம்பரம் ஆச்சார்யா, 52, ஈரண்ணா லே - அவுட் மல்லிகார்ஜுன், 50, வித்யாரண்யபுரா ருத்ரசாமி, 52, சாந்த மூர்த்தி, 60, உட்பட ஐவர் உயிரிழந்தனர். இதில் இறந்த ஒருவரின் பெயர், முகவரி தெரியவில்லை.காரில் இருந்தவர்களில் ஒருவர் காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சித்ரதுர்கா ஊரக போலீசார், காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தவர்களின் உடல்களையும், நொறுங்கிய காரையும் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சுமுகமாக்கினர்.