உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேதார்நாத் யாத்திரையில் இருந்து திரும்பிய 5 பேர் நிலச்சரிவில் பலி

கேதார்நாத் யாத்திரையில் இருந்து திரும்பிய 5 பேர் நிலச்சரிவில் பலி

ருத்ரபிரயாக், உத்தரகண்டில் கேதார்நாத் யாத்திரை சென்று திரும்பிய ஐந்து பக்தர்கள், நிலச்சரிவில் சிக்கி பலியாகினர்; மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.உத்தரகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் உள்ளது. இங்கு 'சார்தாம்' என அழைக்கப்படும் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரிக்கான புனித யாத்திரை கடந்த மே 10ம் தேதி துவங்கியது.கடந்த ஜூலை 31ல் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால், யாத்திரை தடைபட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சமீபத்தில், கேதார்நாத் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் கேதார்நாத் நெடுஞ்சாலையில் உள்ள மண்குடியா என்ற பகுதியில், நேற்று முன்தினம் இரவு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது கேதார்நாத்தில் வழிபாடு மேற்கொண்ட பின் திரும்பிய பக்தர்கள், இதில் சிக்கினர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், இடிபாடுகளில் சிக்கித் தவித்த நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் இரவு, பக்தர் ஒருவர் உடல் மீட்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் மீட்புப்பணிகள் தொடர்ந்தன. அப்போது இடிபாடுகளில் சிக்கிய மேலும் நான்கு பக்தர்களின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். இதன் காரணமாக பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. இதில், மூன்று பேர் பெண்கள். இதுதவிர, படுகாயங்களுடன் மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்.நிலச்சரிவுக்குள்ளான பகுதியில் மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என கூறப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர், குஜராத்தைச் சேர்ந்த ஒருவர், நம் அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் என தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை