உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொடரும் ஓநாய் தாக்குதல் 8 வயது சிறுவன் படுகாயம்

தொடரும் ஓநாய் தாக்குதல் 8 வயது சிறுவன் படுகாயம்

பஹ்ரைச், : உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில், ஓநாய் தாக்கியதில், 8 வயது சிறுவன் காயமடைந்தார். உ.பி.,யின் பஹ்ரைச் மாவட்டத்தில் கடந்த ஜூலையில் ஓநாய்கள் கூட்டமாக படையெடுத்தன. இதனால் அம்மாவட்ட மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். ஓநாய்கள் தாக்கியதில், ஏழு குழந்தைகள் உட்பட எட்டு பேர் இதுவரை பலியாகி உள்ளனர். ஓநாய்களை பிடிக்க, வனத்துறையினரும் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதுவரை, நான்கு ஓநாய்கள் பிடிபட்ட நிலையில் மீதமுள்ளவற்றை பிடிக்க புதிய நுட்பங்களை வனத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், பஹ்ரைச் மாவட்டத்தின் மஹ்சி தெஹ்சில் பகுதியில் உள்ள கோல்வா என்ற கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு, சங்கம் லால், 8, என்ற சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த ஓநாய், சிறுவனை தாக்கியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு மக்கள் வந்ததையடுத்து, ஓநாய் அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த தாக்குதலில், சிறுவனுக்கு கழுத்து, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த சிறுவனுக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஓநாய்களை விரைவில் பிடிக்க, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனிதர்களை பழி வாங்குகிறதா ஓநாய்?

உ.பி., வனத்துறை அதிகாரி சஞ்சய் பதக் நேற்று கூறியதாவது:ஓநாய்களுக்கு பழிவாங்கும் பழக்கம் உள்ளது. யாராவது தங்கள் வீட்டிற்கு அல்லது குட்டிகளுக்கு தீங்கு விளைவித்தால், மனிதர்களை ஓநாய்கள் பழிவாங்குகின்றன. இந்த விவகாரத்தை பொறுத்தவரை, குழந்தைகளை குறிவைத்து ஓநாய்கள் தாக்கி வருகின்றன. இதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள ராமுபூர் கிராம மக்கள் கூறுகையில், '2 கி.மீ., தொலைவில் கரும்பு வயலில் உள்ள குகை ஒன்றில், ஓநாய் குட்டிகளை பார்த்தோம். சமீபத்தில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஓநாய் குட்டிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்திருக்கலாம்' என்றனர். குட்டிகள் உயிரிழப்புக்கு மக்கள் தான் காரணம் எனக் கருதி, அந்த குட்டிகளின் தாய் ஓநாய் பழிவாங்கி வருவதாக, வனவிலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை