பெங்களூரு, : பெங்களூரு கிரிக்கெட் மைதானத்திற்கு குடும்பத்துடன் வந்த மகளிர் போலீசின் மொபைல் போனை திருடியவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில், மே 18ம் தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகளுக்கு இடையே ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடந்தது. குடும்பம்
இப்போட்டியை காண, சித்தாபூர் போலீஸ் நிலைய மகளிர் ஏட்டு ஒருவர், தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். கூட்டம் அதிகமாக இருந்தது. போட்டி முடிந்து வீட்டுக்கு திரும்ப பஸ்சுக்காக குடும்பத்துடன் காத்திருந்தார். சித்தாபூர் செல்லும் பஸ்சில், குடும்பத்துடன் பயணம் செய்தார்.தான் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிய பின் தான், தன் மொபைல் போன் திருடு போனது தெரியவந்தது. உடனடியாக சித்தாபூர் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசாருக்கு, சித்தாபூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர், மொபைல் போனை விற்பனை செய்ய முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது. 32 மொபைல் போன்
அந்நபரை பிடித்து விசாரித்தபோது, மகளிர் போலீசிடம் இருந்து மொபைல் போனை திருடியதை ஒப்புக் கொண்டார். அந்நபர், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சிங், 40, என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து 19.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 32 மொபைல் போன்களை மீட்டுள்ளனர்.இவருடன் அதே மாநிலத்தைச் சேர்ந்த மேலும் மூவரும், மொபைல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.எங்கெங்கு ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்கிறதோ அங்கெல்லாம் இவர்கள் நான்கு பேரும் செல்வர். கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ரசிகர்கள் என்ற போர்வையில் உள்ளே நுழைந்து மொபைல் போன்களை திருடி வந்துள்ளனர்.