உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திறக்கப்படாத பெங்களூரு - சென்னை சாலையில் விபத்து

திறக்கப்படாத பெங்களூரு - சென்னை சாலையில் விபத்து

தங்கவயல்: பெங்களூரு - சென்னை இடையே அமைக்கப்பட்டு வரும் புதிய சாலையில் ஏற்பட்ட விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.பெங்களூரின் ஹொஸ்கோட்டில் இருந்து தமிழகத்தின் ஸ்ரீ பெரும்புதுாருக்கு 'எக்ஸ்பிரஸ் வே' அமைக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் ஹொஸ்கோட் முதல் தங்கவயல் பெமல்நகர் வரை பணிகள் முடிந்துவிட்டன.இந்த சாலை திறப்பிற்கு முன்பே, வாகனங்கள் இயங்கி வருகின்றன. தடுப்புகள் மட்டும் வைக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில், பெங்களூரில் இருந்து தங்கவயல் நோக்கி, நேற்று முன்தினம் இரவு கார் வேகமாக சென்றது. கோலார் குப்பனஹள்ளி என்ற இடத்தில் சென்றபோது, எதிர்த்திசையில் பைக்கில், ஒருவர் வேகமாக வந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார் டிரைவர், பிரேக் பிடித்து நிறுத்த முயன்றார்.ஆனாலும் வந்த வேகத்தில், கார் மீது பைக் மோதியது. துாக்கி வீசப்பட்ட பைக் சுக்குநுாறாக நொறுங்கியது. காரின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது. தகவல் அறிந்த பங்கார்பேட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.பைக்கில் பயணம் செய்தவர் இறந்து கிடந்தார். காருக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர். குழந்தை உட்பட 3 பேர் இறந்தது தெரிந்தது. டிரைவர் உட்பட நான்கு பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நிறைமாத கர்ப்பிணி

விசாரணையில், பைக்கில் வந்தவர் பங்கார்பேட்டை தொட்டூர் கிராமத்தின் ஸ்ரீநாத் , 30 என்பதும், காரில் இறந்தவர்கள் மகேஷ், 55, உத்விதா, 3, ரத்னம்மா, 60, என்பதும் தெரிந்தது. விராட், 4, சுஷ்மிதா, 35, சுஜாதா, 50, கார் டிரைவர் அருண், 34, ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் அனைவரும் தங்கவயல் கம்மசந்திராவை சேர்ந்தவர்கள். படுகாயமடைந்த சுஷ்மிதாவின் கணவர் சந்தோஷ், 35, கம்மசந்திரா கோடி லிங்கேஸ்வரா கோவில் மேலாளராக உள்ளார்.பெங்களூரில் வசிக்கும் உறவினர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவரை பார்க்க திட்டமிட்டனர். சந்தோஷுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் என்பதால், அவர் பெங்களூரு செல்லவில்லை. அவரது குடும்பத்தினர் மட்டும் சென்றனர்.விபத்தில் இறந்த உத்விதா, சந்தோஷின் மகள். சுஷ்மிதா நிறைமாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது. சுஷ்மிதா, அருண் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி