உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பரிசோதனையை தீவிரமாக்க மாநிலங்களுக்கு அறிவுரை

பரிசோதனையை தீவிரமாக்க மாநிலங்களுக்கு அறிவுரை

புதுடில்லி : ஆப்ரிக்க நாடுகள் சிலவற்றில், 'மங்கி பாக்ஸ்' எனப்படும், குரங்கம்மை தொற்று பரவி வருகிறது. கடந்தாண்டு ஜனவரியில் துவங்கிய இந்த தொற்றால், அங்கு 1,100 பேர் இறந்துள்ளனர். பாகிஸ்தான், சுவீடன் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த தொற்று பரவியது. அதனால், சர்வதேச அளவிலான சுகாதார அவசர நிலையாக, உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இந்நிலையில், தொற்று பரவல் உள்ள நாட்டுக்கு சென்று, சமீபத்தில் இந்தியா திரும்பிய வாலிபர் ஒருவருக்கு, குரங்கம்மை அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்தது. தனிமைப்படுத்தப்பட்ட அவருடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பிய ஹரியானா மாநிலம் ஹிசாரை சேர்ந்த, 26 வயது வாலிபருக்கு குரங்கம்மை தொற்று பாதித்து இருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த, 7ம் தேதி அவர், டில்லியில் உள்ள எல்.என்.ஜே.பி., அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும், அந்த வாலிபருக்கு ஏற்பட்டுள்ள தொற்று, உலக சுகாதார அமைப்பு, சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ள கிளேட் - 1 வகை குரங்கம்மையை சேர்ந்தது அல்ல. அவருக்கு, கிளேட் - 2 வகை தொற்று பாதிப்பே உள்ளது. இது, அதிகம் பரவாது. நம் நாட்டில், 2022 ஜூலையில் இருந்து இந்த வகை தொற்று, 30 பேருக்கு இருந்துள்ளது. அதனால், பயப்படத் தேவையில்லை. இது, பரவக் கூடியது அல்ல.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையில், மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதார துறை செயலர் அபூர்வா சந்திரா அனுப்பிய சுற்றறிக்கை: குரங்கம்மை பாதிப்பை தடுக்க போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளுக்கு சென்று திரும்புவோருக்கு, பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளவர்களை தனிமைப்படுத்த வேண்டும். இதற்கான வசதிகளை, மாநில அரசுகள் செய்ய வேண்டும். குரங்கம்மை தொடர்பாக மக்களிடையே வீண் பயம், பதற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாதிப்பில்லை!

வெளிநாட்டில் இருந்து வந்த பயணிக்கு, குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதுடன், அவர் குறித்த விபரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்களில், குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தனி அறை வசதிகள், விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கப்பட்டு உள்ளன.சென்னை, மதுரை, கோவை, திருச்சி அரசு மருத்துவமனைகளில் தலா, 10 வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை கிண்டி கிங் ஆய்வகத்தில் பரிசோதனைக்கான வேதிப்பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. டெங்கு பாதிப்பும் கட்டுக்குள் உள்ளது.- மா.சுப்பிரமணியன், அமைச்சர், மக்கள் நல்வாழ்வு துறை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை