திருமணம், பூப்புனித நீராட்டு விழா, திருவிழா உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளை, மேளம் அடித்தும், நாதஸ்வரம் வாசித்தும் கொண்டாடினால், அதில் கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணை இல்லை.பொதுவாக மேளம் அடிப்பவர்களை விட, நாதஸ்வரம் வாசிப்பவர்களுக்கு மக்களிடம் அதிக மவுசு இருக்கும். சினிமா பாடல்களை அப்படியே நாதஸ்வரம் மூலம் வாசிப்பதில், நாதஸ்வரம் வித்வான்கள் கை தேர்ந்தவர்கள். இப்போதும் ஒலிப்பு
தில்லானா மோகனாம்பாள் படத்தில், கையில் அடிபட்டிருக்கும் நிலையில் கூட, சிவாஜி கணேசன் நாதஸ்வரத்தில் நலம் தானா... நலம் தானா... உடலும் உள்ளமும் நலம் தானா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது; இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.கோவில் திருவிழாக்களில், நாதஸ்வரம் வாசிப்பது தொன்று தொட்டு நடந்து வருகிறது.பெங்களூரில் வசிக்கும் தமிழர் ஒருவரும், நாதஸ்வரம் வாசிப்பில் அசத்தி வருகிறார். அவரை பற்றி பார்க்கலாம்.தமிழகத்தின் திருப்பத்துார் டவுனை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 53. பெங்களூரு கம்மனஹள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.தட்சிணா மூர்த்தியின் கொள்ளு தாத்தா, தாத்தா நாதஸ்வர வித்வான்கள். தட்சிணாமூர்த்தியின் தந்தை கோபால் 'தவில்' வாசிப்பவர். சிறு வயது முதல் ஆசை
இசையில் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்ததால், சிறுவயதிலிருந்தே தட்சிணாமூர்த்திக்கும், நாதஸ்வர வித்வான் ஆக வேண்டும் என்று ஆசை வந்தது.எட்டாம் வகுப்பு படித்து முடித்த பின்னர், பழனியில் உள்ள தேவஸ்தான கலை கல்லுாரியில், நாதஸ்வரம் வாசிப்பதற்கு கற்றுக்கொள்ள இணைந்தார். அங்கு மூன்று ஆண்டுகள் படித்து முடித்த பின்னர், திருநாகேஸ்வரம் ராஜகோபால் பிள்ளை, வேலுார் கணபதி ஆகியோரிடம் 8 ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.அதன் பின்னர் கடந்த 1996 முதல் நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பித்தார். பெங்களூரு ஆர்.ஆர். நகரில் உள்ள, ராஜராஜேஸ்வரி கோவிலில் நடக்கும் நிகழ்ச்சிகளில், நாதஸ்வரம் வாசித்தார். அதன் பின்னர் சிவாஜி நகரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், ஒடுக்கத்துார் மடத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில், நாதஸ்வரம் வாசித்தார். அவரது நாதஸ்வரம் வாசிப்பில் கவர்ந்து ஈர்க்கப்பட்டவர்கள், தங்கள் வீடுகளில் நடக்கும், சுப நிகழ்ச்சிகளிலும் நாதஸ்வரம் வாசிக்க அவரை அழைத்தனர்.ஆல் இந்தியா ரேடியோவில் சுப்ரபாதம் நிகழ்ச்சிக்கு, நாதஸ்வரம் வாசித்து வருகிறார். ஆல் இந்தியா ரேடியோவில் 'பி ஹை' எனும் ஆன்மிகம், நாட்டுப்புற பாடல்கள் பாடும் கிரேடில் உள்ளார்.தனது நாதஸ்வர பயணம் குறித்து அவர் கூறியதாவது:முதன்முதலில் நாதஸ்வரம் வாசித்த போது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கோவில்களில் நடக்கும் சண்டி ஹோமம், பிரம்ம உற்சவம், நவராத்திரி நிகழ்சிகளின் போது, நாதஸ்வரம் வாசித்துள்ளேன்.தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என நான்கு மாநிலங்களில், 600 முதல் 700 கோவில்களில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில், நாதஸ்வரம் வாசித்து இருக்கிறேன்.ஆல் இந்தியா ரேடியோவில் 'பி ஹை' கிரேடில் உள்ளேன். இந்த கிரேடு இருப்பதால், மாநில அளவிலான நிகழ்ச்சிகளுக்கு நாதஸ்வரம் வாசித்து கொடுக்கிறேன். 'ஏ' கிரேடில் இருந்தால், தேசிய அளவில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு நாதஸ்வரம் வாசித்துக் கொடுக்க முடியும். அதற்கும் முயற்சி செய்து வருகிறேன்.எனது நாதஸ்வர வாசிப்பு திறமையை பார்த்து, காஞ்சிபுரம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 'ஆஸ்தான வித்வான் விருது' வழங்கி கவுரவித்தார்.பெங்களூரு ஒயிட்பீல்டு புட்டபர்த்தி ஆசிரமம் சார்பில், 'கர்நாடக சிறந்த நாதஸ்வர வித்வான் விருது' எனக்கு வழங்கப்பட்டுள்ளது.கோவில் நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசிக்கும்போது, அதற்கு பெரிய தொகை எதுவும் நான் எதிர்பார்ப்பதில்லை. கோவிலில் நாதஸ்வரம் வாசிப்பது, கடவுளுக்கு செய்யும் சேவை போன்றது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம், நிச்சயதார்த்தம், பூப்புனித நீராட்டு விழா, வளைகாப்பு நிகழ்ச்சிகளுக்கு, நாதஸ்வரம் கட்டாயம் இருக்கும். இப்போது கொஞ்சம், கொஞ்சமாக சுப காரியங்களில் நாதஸ்வரத்திற்கான மவுசு குறைந்து வருகிறது. நாதஸ்வரம் மகிமையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டுமென்ற ஆசை எனக்கு உள்ளது.எனது மனைவி ஜீவலட்சுமி. மகள்கள் நதியா, கலைவாணி. இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. மகன் தினேஷ் சார்ட்டட் அக்கவுண்ட் படித்து வருகிறார். என்னையும், எனது குடும்பத்தையும் வாழ வைத்தது நாதஸ்வரம் தான்.இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.இவரை வாழ்த்த நினைப்போர், 98453 09474 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு வாழ்த்தலாம்- நமது நிருபர் - -.