| ADDED : ஜூலை 28, 2024 11:37 PM
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஷைனி; தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் ஊழியராக பணிபுரிகிறார். இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். நேற்று காலை இவர் வீட்டில் இருந்த போது, முகக்கவசம் அணிந்த பெண் ஒருவர் வந்து, ஷைனி பெயருக்கு பதிவு தபால் வந்திருப்பதாகவும், கையெழுத்து போட்டு பெற்றுக்கொள்ளும்படியும் கூறியுள்ளார்.இதற்காக அவர் வெளியே வந்த போது, அப்பெண், 'ஏர் கன்' எனப்படும் விளையாட்டுகளில் பயன்படுத்தும் துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். தன் கையை வைத்து ஷைனி தடுத்த போது, அவர் கையில் குண்டு பட்டு காயம் ஏற்பட்டது. அடுத்தடுத்து அவர் சுட்ட இரண்டு குண்டுகளும் தரையில் பட்டன. இதன்பின், அவர் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றுவிட்டார்.இது குறித்து திருவனந்தபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், அப்பகுதியில் இருந்த, 'சிசிடிவி' காட்சிகளை வைத்து வண்டி எண்ணை கண்டறிந்தனர். ஆனால், அது போலியான எண் என தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.