| ADDED : ஜூன் 21, 2024 12:57 AM
புதுடில்லி, லோக்சபா தேர்தல் முடிவடைந்ததை அடுத்து,18வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் வரும் 24ல் துவங்கி, ஜூலை 3 வரை நடக்கஉள்ளது. முதல் மூன்று நாட்கள் புதிய எம்.பி.,க்களின் பதவியேற்பு நடக்கவுள்ளது. தொடர்ந்து, சபாநாயகர் தேர்தல் நடக்கவுள்ளது. சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை புதிய எம்.பி.,க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, சபையை நடத்துவது இடைக்கால சபாநாயகரின் பொறுப்பு. இந்நிலையில், இடைக்கால சபாநாயகராக ஒடிசாவின் கட்டாக் தொகுதி எம்.பி.,யான பரத்ருஹரி மஹ்தாப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று நியமித்தார். இவர் ஆறு முறை பிஜு ஜனதா தளம் சார்பில் கட்டாக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த மார்ச்சில், அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்து, அதே கட்டாக் தொகுதியில் போட்டியிட்டு ஏழாவது முறையாக எம்.பி.,யாக வெற்றி பெற்றார்.