தாய்ப்பால் இல்லாமல் யானைக் குட்டி பலி
ஷிவமொக்கா: ஷிவமொக்காவின் சக்ரிபைலு வளர்ப்பு யானைகள் முகாமில், ஹேமாவதி என்ற 11 வயது யானை, ஐந்து நாட்களுக்கு முன்பு, குட்டி ஈன்றது. ஆனால் அதன்பின் தன் குட்டிக்கு ஹேமாவதி பால் கொடுக்கவில்லை.வனத்துறை ஊழியர்கள் எவ்வளவோ முயற்சித்தும், தன் குட்டியை பால் குடிக்க அது அனுமதிக்கவில்லை.வேறு வழியின்றி, யானை குட்டிக்கு வனத்துறை ஊழியர்கள் பாட்டில் புகட்டினர். இந்த நிலையில் நேற்று காலை யானை குட்டி உயிரிழந்தது.அதன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தாய்ப்பால் கிடைக்காததுடன், வெப்பத்தின் தாக்கத்தையும் யானை குட்டியால் தாங்க முடியாமல் போனதே, அது இறப்பதற்கு காரணம் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.இதற்கிடையே, குட்டியை ஈன்ற ஹேமாவதி யானைக்கும், சிகிச்சை அளிக்க டாக்டர்களால் முடியவில்லை. அதன் அருகில் இருக்கும் ஆண் யானை ஒன்று, யாரையும் நெருங்கவிடாமல் ஹேமாவதியை பாதுகாக்கிறது.