உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏழைகளுக்கு வங்கி கணக்கு அரசின் சாதனை: பிரதமர்

ஏழைகளுக்கு வங்கி கணக்கு அரசின் சாதனை: பிரதமர்

புதுடில்லி, பிரதமர் ஜன் தன் திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவை ஒட்டி பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், 'வங்கி சேவை கனவாக இருந்த கோடிக்கணக்கான ஏழை மக்கள் இத்திட்டத்தால் பயனடைந்தனர்' என்று குறிப்பிட்டார்.ஏழைகள் அனைவருக்கும் வங்கிகளில் அடிப்படை சேமிப்புக் கணக்கு, கடன், பணப் பரிவர்த்தனை, காப்பீடு போன்ற நிதிச் சேவைகளை உறுதிப்படுத்த, கடந்த 2014 ஆகஸ்ட் 28ல் பிரதமர் ஜன் தன் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் 10வது ஆண்டு விழாவை ஒட்டி பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட அறிக்கை: அனைவருக்கும் வங்கி சேவை வழங்குவது என்ன அவ்வளவு பெரிய திட்டமா என்று மக்களில் பலர், குறிப்பாக இளைஞர்கள் யோசிப்பீர்கள். தற்போது வேண்டுமானால் வங்கி கணக்கு வைத்திருப்பது எளிதாக இருக்கலாம். ஆனால், 2014ல் நாங்கள் பதவியேற்றபோது, நிலைமை முற்றிலும் வேறு. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன போதும் வங்கி சேவையை அணுகுவது கோடிக்கணக்கானவர்களுக்கு கனவாகவே இருந்தது. இதனால், தனிநபர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி, மக்கள் நிதிப் பாதுகாப்பு இல்லாமல் இருந்தனர். அந்த சூழலில் கொண்டு வரப்பட்டது தான் இந்த திட்டம். இது ஏழைகளுக்கு கண்ணியத்தையும், அதிகாரத்தையும், தேச பொருளாதாரத்தில் பங்கேற்கும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. 53 கோடிக்கும் அதிகமான மக்கள் ஜன் தன் திட்டத்தின் வாயிலாக வங்கிக் கணக்கு துவங்கியுள்ளனர். அதில், 65 சதவீதம் கணக்குகள் ஊரக மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்தவர்களுடையவை. தற்போது ஜன் தன் வங்கி கணக்குகளில் 2.3 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் குவிந்துள்ளது. இத்திட்டம் வெற்றியடைய உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ