உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., - ம.ஜ.த., ஆட்சி முறைகேடு கண்டறிய குழு; இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பா.ஜ., - ம.ஜ.த., ஆட்சி முறைகேடு கண்டறிய குழு; இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பெங்களூரு : பா.ஜ., - ம.ஜ.த., ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து கண்டறிய, 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை முதல்வர் சித்தராமையா நேற்று அமைத்தார்.கர்நாடகாவில் தற்போது நடக்கின்ற காங்கிரஸ் ஆட்சியில், வால்மீகி மேம்பாட்டு ஆணையம், மைசூரு மேம்பாட்டு ஆணையத்தில், முறைகேடு நடந்துள்ளதாக, பா.ஜ., குற்றஞ்சாட்டி வருகிறது.இதை குறிப்பிட்டு, மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தியது.மைசூரு பாதயாத்திரை நடத்தி, முதல்வர் சித்தராமையாவை பதவி விலகும்படி வலியுறுத்தியது.

கொரோனா காலம்

இதற்கிடையில், கொரோனா கால கட்டத்தில், மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறிய காங்., அரசு, அது குறித்த விசாரணை கமிஷன் அறிக்கையை சமீபத்தில் பெற்றது.இந்நிலையில், அடுத்தகட்டமாக முந்தைய பா.ஜ., -- ம.ஜ.த., ஆட்சியில் நடந்த அனைத்து முறைகேடுகள் குறித்து கண்டறிய, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தலைமையில் அமைச்சர்கள் குழுவை, முதல்வர் சித்தராமையா நேற்று அமைத்தார்.இக்குழுவில், சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா, ஐ.டி., - பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

அறிக்கை

இந்த குழு, வெவ்வேறு விசாரணை அமைப்புகளில் அளித்துள்ள முறைகேடுகள் குறித்த புகார்களை கண்டறிந்து நிலுவையில் உள்ள விசாரணையை துரிதப்படுத்தி, முழு விபரத்தையும், இரண்டு மாதங்களுக்குள் முதல்வருக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.முதல்வர் உத்தரவில், எந்த காலத்து ஆட்சி என்று குறிப்பிடவில்லை.ஆனால், ஆளுங்கட்சி வட்டார தகவல்படி, பா.ஜ., - ம.ஜ.த., ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தவே குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ராகுலுக்கு கடிதம்

முதல்வர் பதவி குறித்து அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்தை கூறி வருவதற்கு தடை விதிக்கும்படி, காங்கிரஸ் எம்.எல்.சி.,க்கள், நேற்று முன்தினம் காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதினர். இது போன்று, முதல்வர் பதவி குறித்து பேச தடை விதிக்கும்படி, மூத்த தலைவர்கள் நேற்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு கடிதம் எழுதினர். இந்த கடிதம், முதல்வர் 'வாட்ஸாப்' குழுவில் நேற்றிரவு வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ