பெலகாவி: ''எனக்கும், பெலகாவிக்கும் 30 ஆண்டுகள் பந்தம் உள்ளது. அனுபவமே வளர்ச்சியின் அஸ்திவாரம்,'' என, பெலகாவி பா.ஜ., வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.பெலகாவியில் நேற்று அவர் கூறியதாவது:என் அரசியல் அனுபவத்தை பெலகாவி வளர்ச்சிக்கு பயன்படுத்துவேன். முதல்வராக இருந்த எனக்கு, எந்த மாவட்டத்துக்கு என்ன தேவை என்பது நன்றாக தெரியும். பெலகாவி என் கர்மபூமி. மாவட்டத்தின் வளர்ச்சியே, என் கனவு. எனக்கும், பெலகாவிக்கும் 30 ஆண்டுகள் தொடர்பு உள்ளது. அமோக ஆதரவு
தொகுதியில் எனக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் சென்றுள்ளேன். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வேண்டும் என, மக்கள் முடிவு செய்துள்ளனர்.நாட்டில் மோடி எங்கெங்கு பிரசாரம் செய்தாரோ, அங்கெல்லாம் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இளம் தலைமுறையினரை ஈர்ப்பது, மூத்தவர்களை கவுரவிப்பது, பெண்களுக்கு மரியாதை செய்வது, நாட்டை நேசிக்கும் மோடியின் குணம், மக்களுக்கு பிடித்துள்ளது. பிரதமர் வந்து சென்ற பின், தொண்டர்களின் உற்சாகம் அதிகரித்துள்ளது.தேவையற்ற விஷயங்களை விவாதித்து, நேரத்தை வீணாக்க நான் தயாராக இல்லை. மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுள்ளனர். பெலகாவி தொகுதியை சாராதவன் என, காங்கிரசார் என்னை விமர்சிக்கின்றனர்.சித்தராமையா மைசூரை விட்டு, பாதாமியில் போட்டியிட்டார். அப்போது அவர் வெளியாள் இல்லையா? இந்திரா சிக்கமகளூரிலும், சோனியா பல்லாரியிலும், போட்டியிடவில்லையா? தகுதியில்லை
இம்முறை லோக்சபா தேர்தலில், அமைச்சர் சிவானந்த் பாட்டீலின் மகள், பாகல்கோட்டில் போட்டியிடுகிறார். இவரை வெளியாள் என, லட்சுமி ஹெப்பால்கர் கூறுவாரா? என்னை வெளியாள் என கூற, அவருக்கு தகுதி இல்லை.நாட்டை வழி நடத்தும் மிக பெரிய பொறுப்பு, பார்லிமென்டுக்கு உள்ளது. பல ஆண்டுகள் அரசியல் அனுபவம், மக்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டவர்கள், பார்லிமென்ட்டில் இடம் பெற வேண்டும்.இளம் அரசியல்வாதிகள் முதலில் அரசியல் அனுபவம் பெற வேண்டும். போராட வேண்டும்; பழகிய பின் பதவிக்கு வர வேண்டும். எதுவுமே இல்லாமல் நேரடியாக, பதவியில் அமர்ந்தால் பதவிக்கு அபாயம். நானும் கூட பல ஆண்டுகள் பழகிய பின், பதவிக்கு வந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.