கனமழையால் சாலையில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று, கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் தேங்கியது. மத்திய டில்லி சாணக்யபுரி பிரிட்டிஷ் பள்ளி அருகே சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி 15 வயது சிறுவன் உயிரிழந்தான்.டில்லியில் நேற்று அதிகாலை முதலே கனமழை கொட்டியது. இதனால், மாநகரில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், சுரங்கப் பாதைகளில் வெள்ளம் தேங்கியது. அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ஜி.டி.கே., டிப்போ அருகே மழைநீர் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. மோதி பாக் சவுக்கில் இருந்து ஆர்.கே. புரம் செல்லும் சாலையில் மோதி பாக் சவுக் அருகே மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.அதேபோல, தவுலா குவான் மேம்பாலத்துக்கு கீழ் வெள்ளம் ஓடியதால் ரிங் ரோடு, வந்தே மாதரம் மார்க் மற்றும் ஜி.ஜி.ஆர்., ஆகிய சாலைகளிலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.சத்ய நிகேதன் பஸ் ஸ்டாண்ட் குளம்போல் மழைநீர் தேங்கிக் கிடந்தது. இதனால், சப்தர்ஜங்கில் இருந்து தவுலா குவான் செல்லும் சாலையின் இரு பாதைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.விவேகானந்தர் கேம்ப் பகுதியில் வசித்த சவுரவ்,15, நண்பர்களுடன் பிரிட்டிஷ் பள்ளி அருகே சாலையில் தேங்கியிருந்த மழைநீரிஉல் விளையாடினான். அப்போது, கால் இடறி விழுந்து தண்ணீரில் மூழ்கினான். அவனது நண்பர்கள் கொடுத்த தகவலையடுத்து வந்த பெற்றோர், சவுரவை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் சவுரவ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். போலீசார் வந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.