உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஸ் கட்டணம் உயர்த்தப்படாது கடும் எதிர்ப்பால் முதல்வர் பல்டி

பஸ் கட்டணம் உயர்த்தப்படாது கடும் எதிர்ப்பால் முதல்வர் பல்டி

பெங்களூருரு: ''பெட்ரோல், டீசல் விலை உயர்வால், தற்போதைக்கு கர்நாடகாவில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படாது,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.கர்நாடகாவில் தற்போதைய காங்கிரஸ் அரசு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும்; டீசல் விலை 3.50 ரூபாயும் வரியை உயர்த்தி, இரண்டு நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. இதனால், கர்நாடக சாலை போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணம் உயர்த்துவதற்கு மாநில அரசு யோசித்து வந்தது.இது குறித்து, முதல்வர் சித்தராமையா, மைசூரில் நேற்று கூறியதாவது:பா.ஜ., அரசு நடக்கும் குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை ஒப்பிடுகையில், கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே உள்ளது. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்த போது, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். அப்போது, மத்தியில் பா.ஜ., அரசு அமைந்தால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று அவர் கூறி இருந்தார்.ஆனால், ஆட்சிக்கு வந்த பின், அளித்த வாக்குறுதிக்கு எதிராக செயல்படுகிறார். அவர் பிரதமரான போது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 72.26 ரூபாயாக இருந்தது. தற்போது, 104 ரூபாயாக உயர்ந்துள்ளது.ஏழை, எளியோர் மீது அக்கறை இருந்திருந்தால், விலையை குறைத்திருக்க வேண்டும். ஜி.எஸ்.டி.,யால், மாநிலத்தின் வரி வருவாய் குறைந்துள்ளது. பத்திரப்பதிவு, மோட்டார் வாகன வரி தவிர, மற்றவை மத்திய அரசு தான் நிர்ணயம் செய்கிறது.இதனால், கர்நாடகாவுக்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வாக்குறுதி திட்டங்களுக்கு பணம் இல்லாமல், விலை உயர்த்தப்படவில்லை. வளர்ச்சி பணிகளுக்கு நிதி திரட்டவே நிதி வசூலிக்கப்பட்டது.பெட்ரோல், டீசல் விலை உயர்வால், தற்போதைக்கு கர்நாடகாவில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படாது. முதலில், போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பெட்ரோல், டீசல் விலை உயர்வால், எதிர்க்கட்சியினர் மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பஸ் கட்டண உயர்வு முடிவில் இருந்து, முதல்வர் சித்தராமையா பின்வாங்கி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்