முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சு பா.ஜ., -- எம்.எல்.ஏ., மீது வழக்கு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தானே: 'மசூதிக்குள் நுழைந்து முஸ்லிம்களை தாக்குவோம்' என மிரட்டியதாக மஹாராஷ்டிரா பா.ஜ., - எம்.எல்.ஏ., நிதேஷ் ரானே மீது, போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இப்பகுதியைச் சேர்ந்த ஹிந்து மத தலைவர்களில் ஒருவர் மஹந்த் ராம்கிரி மகாராஜ். இவர் கடந்த மாதம் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதனால், அவருக்கு மிரட்டல்கள் வர துவங்கின. இந்நிலையில், பா.ஜ., - எம்.எல்.ஏ., நிதேஷ் ரானே சமீபத்தில் ராம்கிரி மகாராஜுக்கு ஆதரவாக அகமது நகர் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, 'ராமகிரி மகாராஜுக்கு எதிராக யாராவது ஏதாவது சொன்னால், நாங்கள் உங்கள் மசூதிக்குள் நுழைந்து ஒவ்வொருவராக அடிப்போம்; மனதில் வைத்துக் கொள்ளுங்கள்' என்று ஆவேசமாக பேசினார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., நிதேஷ் மீது, வெறுப்புணர்வை துாண்டும் விதமாக பேசியது உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் மஹாராஷ்டிரா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.