| ADDED : ஏப் 06, 2024 02:34 AM
புதுடில்லி, டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிதாவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதிஅளித்துள்ளது. டில்லி மதுபான கொள்கை விவகாரத்தில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருடன் சேர்ந்து, பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்டிர சமிதியைச் சேர்ந்த கவிதாவும் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளான கவிதா, இந்த விஷயத்தில் ஆம் ஆத்மிக்கு 100 கோடி ரூபாய் வழங்கியதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத் துறையினர், கடந்த மாதம் 15ம் தேதி ஹைதராபாதில் கவிதாவை கைது செய்தனர். தற்போது அவர் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, சி.பி.ஐ., தரப்பில் டில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு நேற்று அனுமதி வழங்கினார். இதற்கிடையே, 'தற்போது தேர்வு எழுதும் என் 16 வயது மகனுக்கு, தாயின் உணர்வுபூர்வ அரவணைப்பு தேவை என்பதால், எனக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும்' என, கவிதா தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.