புதுடில்லி, பள்ளி பாட புத்தகங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை செய்யும்படி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. தரமான பள்ளி பாட புத்தகங்களை தயாரிப்பதற்காக, மத்திய அரசு என்.சி.இ.ஆர்.டி., எனும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலை ஏற்படுத்தியது. என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துடன் ஒத்துப்போவதால், அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் இந்த புத்தகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.தற்போது, புதிய கல்வி கொள்கையின் படி அனைத்து வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை உருவாக்கும் பணியில் என்.சி.இ.ஆர்.டி., ஈடுபட்டுள்ளது. இந்த புத்தகங்கள் 2026க்குள் தயாராகிவிடும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் என்.சி.இ.ஆர்.டி.,யிடம், 'இனி புதிய கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன்னதாக ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு நடத்தி, பாடப்புத்தகங்களில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளது. விரைவில் இதற்கான வழிமுறைஉருவாக்கப்பட உள்ளது.
'நெட்' தேர்வு ஒத்தி வைப்பு
கல்லுாரி உதவி பேராசிரியர் பணி மற்றும் பி.எச்டி., ஆய்வு படிப்புக்கான 'நெட்' எனப்படும் தேசிய தகுதி தேர்வு ஜூன் 16ல் நடத்தப்படும் என யு.ஜி.சி., அறிவித்திருந்தது. அதே நாளில் யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வும் நடத்தப்படுகிறது. இதையடுத்து நெட் தேர்வு ஜூன் 18க்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.