புதுடில்லி, போட்டி தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டர்கள், மாணவர்களின் உயிரை குடிக்கும், 'மரண சேம்பர்'களாக மாறி வருவதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய மற்றும் டில்லி அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.டில்லியில் கடந்த வாரம் பெய்த கனமழையால், பழைய ராஜிந்தர் நகரில் உள்ள, 'ராவ் ஐ.ஏ.எஸ்., ஸ்டடி சர்க்கிள்' என்ற யு.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கான மையத்தில், மழைநீர் புகுந்தது. இதில், மூன்று தேர்வர்கள் தண்ணீரில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் பிறப்பித்த உத்தரவு:கட்டட மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை, கோச்சிங் சென்டர்கள் கடைப்பிடிக்காத பட்சத்தில், தற்போதைக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால், இந்த கோச்சிங் சென்டர்களை, மூட உத்தரவிடுவோம்.கோச்சிங் சென்டர்கள் மரண சேம்பர்களாக மாறி வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து படிக்க வரும் மாணவர்களின் வாழ்க்கையுடன் நீங்கள் விளையாடுகிறீர்கள்.பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான அடிப்படை விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்காத வரை, கோச்சிங் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க முடியாது. இதுவரை எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் டில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜாமின் மனு தள்ளுபடி
டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த ஜூனில் சி.பி.ஐ., கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமின் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்ததோடு, விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படி, கெஜ்ரிவாலுக்கு அறிவுறுத்தியது. மேலும், சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவர் தாக்கல் மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாக, ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன. அமலாக்கத்துறை வழக்கில் டில்லி திஹார் சிறையில், 100 நாட்களுக்கும் மேல் கெஜ்ரிவால் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.