புதுடில்லி: தேர்தல் பிரசாரத்திற்கு போதிய நிதி தராததால் ஒடிசாவின் புரி லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சுசித்ரா மொகந்தி விலகிய நிலையில், புதிய வேட்பாளராக ஜெய் நாராயண் பட்நாயக் போட்டியிடுவார் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சியில் உள்ளது. இங்குள்ள 21 லோக்சபா தொகுதிகளுக்கு, மே 13 முதல் நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மேலும், சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது.இங்குள்ள புரி லோக்சபா தொகுதிக்கு, மே 25ல் தேர்தல் நடக்க உள்ளது. இங்கு, பா.ஜ., சார்பில் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, பிஜு ஜனதா தளம் சார்பில் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் அருப் பட்நாயக் போட்டியிடுகின்றனர்.காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி., பிரஜ்மோகன் மொகந்தியின் மகளான சுசித்ரா மொகந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.முன்னாள் பத்திரிகையாளரான இவர், கட்சியின் அமைப்பு பொதுச் செயலர் கே.சி.வேணுகோபாலுக்கு, மின்னஞ்சல் ஒன்றை சமீபத்தில் அனுப்பினார்.இதில் சுசித்ரா மொகந்தி குறிப்பிடுகையில், 'புரி தொகுதியில் போட்டியிட, கட்சியில் இருந்து செலவுக்கு எந்த நிதியும் வரவில்லை; இது குறித்து கேட்டபோது, சொந்த நிதியில் இருந்து செலவிடும்படி கூறி இருந்தனர்.'அவை அனைத்தும் செலவான நிலையில், மேற்கொண்டு செலவழிக்க என்னிடம் போதிய நிதி இல்லை. எனவே, கட்சியின் நிதியில்லாமல், இந்தத் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட வாய்ப்பில்லை. அதனால், எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை திருப்பி தருகிறேன்' என, குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், அத்தொகுதியில் ஜெய் நாராயண் பட்நாயக் போட்டியிடுவார் என காங்., தலைமை அறிவித்துள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், 'ஒடிசாவின் புரி லோக்சபா தொகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சுசித்ரா மொகந்திக்கு பதிலாக ஜெய் நாராயண் பட்நாயக் காங்., வேட்பாளராக போட்டியிடுவார்' என, குறிப்பிட்டுள்ளது.