UPDATED : ஆக 27, 2024 07:37 PM | ADDED : ஆக 27, 2024 07:07 PM
பெங்களூரு: ரேணுகாசாமி என்ற இளைஞர் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகர் தர்ஷனுக்கு சிறையில் ராஜ உபச்சாரம் நடந்தது தொடர்பான புகைப்படம் வெளியான நிலையில், அவரை பெல்லாரி சிறைக்கு மாற்ற கோர்ட் அனுமதி அளித்தது. சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. இவர், நடிகர் தர்ஷனின் நெருங்கிய தோழி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததாக வந்த புகாரில் ரேணுகாசாமியை, தர்ஷன், பவித்ரா, தர்ஷனின் ஆதரவாளர்கள் என 17 பேர் சேர்ந்து ரேணுகாசாமியை கொலை செய்தனர்.இந்த வழக்கில் நடிகர் தர்ஷன் உள்ளிட்டோர் கடந்த ஜூலை 21ம் தேதி கைதாகினர். இதையடுத்து 17 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று இணையதளத்தில் நடிகர் தர்ஷன் சிறையில் மது, சிகரெட்டுடன் சேரில் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வைரலானது. இதில் 7 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்திற்கு முடிவு செய்ய நடிகர் தர்ஷனை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து பெல்லாரி சிறைக்கு மாற்ற பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, அவரை பெல்லாரி சிறைக்கு மாற்ற அனுமதி அளித்தார்.