யானை தாக்குதலில் தப்பிய குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காமல் இழுத்தடிப்பு
மூணாறு; காட்டு யானை தாக்குதலில் உயிர் தப்பிய குடும்பத்தினருக்கு ஓராண்டு ஆகியும் சிகிச்சை செலவுக்கு பணம் வழங்காமல் வனத்துறையினர் இழுத்தடித்து வருகின்றனர்.மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனைச் சேர்ந்தவர் தொழிலாளி சுரேஷ்குமார் 45. இவர் பணி நேரம் தவிர எஞ்சிய நேரங்களில் தனக்குச் சொந்தமான ஆட்டோவை ஓட்டினார். கடந்தாண்டு பிப்.26ல் ஆட்டோவை ஓட்டிச் சென்றபோது இரவு 9:30 மணிக்கு டாப் டிவிஷன் பகுதியில் காட்டு யானை தாக்கி இறந்தார். ஆட்டோவில் வந்த அதே பகுதி இசக்கிராஜ் 45, அவரது மனைவி 38, மகள் குட்டிபிரியா 12, ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.யானை தாக்கி இறந்த சுரேஷ்குமாரின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கிய நிலையில், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை செலவு உள்பட நஷ்ட ஈடு வழங்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர்.ஆனால் சம்பவம் நடந்து ஓராண்டு ஆகியும் இசக்கிராஜ் குடும்பத்தினருக்கு சிசிச்சை செலவு உள்பட எவ்வித நிதியும் வழங்காமல் வனத்துறையினர் இழுத்தடித்து வருகின்றனர்.அச்சம் மாறாத குட்டிபிரியா: இவர் மூணாறில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்தாண்டு பள்ளி ஆண்டு விழா முடிந்து வீட்டிற்கு பெற்றோருடன் சென்றபோது தான் காட்டு யானையிடம் சிக்கி உயிர் தப்பினார்.அன்று முதல் வீட்டிற்கு வர அஞ்சிய குட்டிபிரியா பள்ளிவாசல் எஸ்டேட்டில் உள்ள தனது அத்தை வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.