உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிமன்ற கண்டனத்தால் தவறான செய்தி நீக்கம்

நீதிமன்ற கண்டனத்தால் தவறான செய்தி நீக்கம்

ஸ்ரீநகர்,நீதிபதி விடுமுறையில் சென்றது தொடர்பாக தவறான செய்தி வெளியிட்டது குறித்து ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, இணையதளத்தில் இருந்து அந்த செய்தியை, 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் நீக்கியுள்ளது.ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்ற நீதிபதி அதுல் ஸ்ரீதரன் விசாரித்து வந்த, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு தொடர்பான வழக்குகள் மற்றொரு அமர்வுக்கு சமீபத்தில் மாற்றப்பட்டன. இந்நிலையில், கடந்த, 2ம் தேதி நீதிபதி அதுல் ஸ்ரீதரன் விடுமுறையில் சென்றார்.தன்னிடம் இருந்த வழக்குகள் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் விடுமுறையில் சென்றதாக, அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், அதன் இணையதளத்திலும் இது இடம்பெற்றது.இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன், முகமது யூசுப் வானி அடங்கிய, உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்தது. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:தனிப்பட்ட மருத்துவ காரணங்களுக்காகவே நீதிபதி விடுமுறையில் சென்றார். எந்தெந்த நீதிபதிகள் எந்தெந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்பதை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு செய்வார். அதன்படி, நிர்வாக வசதிக்காக செய்யப்பட்ட மாற்றத்தை, ஏதோ உள்நோக்கம் உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.இது நீதிமன்றத்தின் நிர்வாக அதிகாரத்தில் தலையிடுவதாக அமைந்துள்ளது. அதனால், இந்த பத்திரிகை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்வது தொடர்பாக முடிவு செய்ய, இந்த விவகாரம், தலைமை நீதிபதியின் பார்வைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.நீதிமன்ற அமர்வின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து, தன் இணையதளத்தில் இருந்து அந்த செய்தியை, தி ஹிந்து நாளிதழ் நீக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை