உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., பண மோசடி வழக்கில் கைது

டில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., பண மோசடி வழக்கில் கைது

புதுடில்லி: பண மோசடி தொடர்பான வழக்கில், டில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அமானதுல்லா கான், அமலாக்கத் துறையால் நேற்று கைது செய்யப்பட்டார்.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. ஓக்லா தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வான அமானதுல்லா கான், 2018 - 2022ல் டில்லி வக்பு வாரியத் தலைவராக இருந்தார்.அப்போது வக்பு வாரியத்தில் போலி நியமனங்கள் செய்ததாகவும், சொத்துக்களை குத்தகைக்கு விடுவதில் மோசடி செய்ததாகவும், புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் டில்லி ஊழல் ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இவ்வாறு மோசடி செய்து கிடைத்த பணத்தில், சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும் புகார்கள் கூறப்பட்டன.இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்தாண்டு மே மாதத்தில் இருந்து, 10 முறை அனுப்பப்பட்ட சம்மன்களை புறக்கணித்து விசாரணைக்கு ஆஜராவதை அமானதுல்லா தவிர்த்து வந்தார்.இந்நிலையில், அமலாக்கத் துறையினர் அவருடைய வீட்டில் சோதனைக்கு நேற்று காலை சென்றனர். நீண்ட நேரம் நடந்த சோதனைக்குப் பின், உரிய பதில்கள் அளிக்காததால், அவரை கைது செய்தனர்.இதற்கிடையே, அமலாக்கத் துறை தன்னைக் கைது செய்ய வந்துள்ளதாக, சமூக வலைதளத்தில் அவர், நேற்று காலை பதிவிட்டிருந்தார்.ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பலரும், அவருக்கு ஆதரவாகவும், அமலாக்கத் துறை மற்றும் மத்திய அரசுக்கு எதிராகவும் குற்றஞ்சாட்டி பதிவிட்டனர்.ஏற்கனவே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், எம்.பி.,யான சஞ்சய் சிங் ஆகியோர் பண மோசடி தொடர்பான மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில், சிசோடியா மற்றும் சஞ்சய் சிங், தற்போது ஜாமினில் உள்ளனர்.அமானதுல்லா கான் கைது செய்யப்பட்டுள்ளதற்கு, ஆம் ஆத்மி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.'பா.ஜ.,வின் அமலாக்கத் துறை, அமானதுல்லா கானை கைது செய்துள்ளது. கட்சியின் குரலை நசுக்க அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். ஆனால், அது நடக்காது' என, ராஜ்யசபா எம்.பி.,யான சஞ்சய் சிங், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் நாயருக்கு ஜாமின்

டில்லி மதுபான ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில், ஆம் ஆத்மியின் ஊடகப் பிரிவு முன்னாள் தலைவர் விஜய் நாயர், 2022 நவ., 13ல் கைது செய்யப்பட்டார். இவருக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.இது குறித்து அமைச்சர் ஆதிஷி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'உண்மைக்கு சோதனை வரலாம், ஆனால், அதை வீழ்த்த முடியாது. மத்திய பா.ஜ., அரசின் முயற்சிகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகின்றன. சத்தியம் வென்றுள்ளது' என, குறிப்பிட்டுள்ளார்.இதேபோல் ஆம் ஆத்மி எம்.பி., ஸ்வாதி மாலிவாலை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட ெகஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கும் உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமின் அளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ