| ADDED : ஜூலை 17, 2024 10:10 PM
புதுடில்லி:இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்து காவலர்களின் சீருடையை மாற்ற டில்லி காவல்துறை திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.டில்லி காவல் துறையில் தற்போது 90,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.சீருடை மாற்றம் குறித்து பெயர் வெளியிட விரும்பாத மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேசிய தலைநகரில் நிலவும் வானிலை காரணமாக சீருடையை மாற்ற டில்லி காவல் துறை ஆலோசித்து வருகிறது. இது திட்டமிடல் கட்டத்தில் உள்ளது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. சீருடையில் கண்டிப்பாக 'காக்கி' நிறம் இருக்கும்.கோடை காலத்தில் டி-ஷர்ட்கள் மற்றும் பேன்ட்களும் குளிர்காலத்தில் கம்பளி சட்டைகள், சிறப்பு தரமான வார்மர்களுடன் கூடிய பேன்ட்களும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.டில்லியின் சில பகுதிகளில், 'காக்கி' நிற டி-ஷர்ட் மற்றும் பேன்ட்கள் சோதனைக்காக கான்ஸ்டபிள்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.டைரிகள், மொபைல் போன் உள்ளிட்டவற்றுடன் பணிக்குத் தேவையானவற்றை எடுத்துச் செல்லும் வகையில் பேன்ட் இருக்கும்.ஷூக்கள், ஜாக்கெட்டுகள், தொப்பி உள்ளிட்டவையும் காலத்திற்கு ஏற்ப மாற்றத்திற்கு உள்ளாகலாம்.கொடியேற்றம், அணிவகுப்பு உள்ளிட்ட விழாக்களுக்கு டூனிக் சீருடைகளை மாற்றவும் படை திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.