பாலியல் புகாரால் கதறும் கேரள சினிமா நடிகர் சங்க செயற்குழு கலைப்பு தலைவர் பதவிக்கு மோகன்லால் முழுக்கு
திருவனந்தபுரம்,மலையாள திரைப்பட நடிகர்கள் மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுவதை தொடர்ந்து, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் நேற்று ராஜினாமா செய்தார். சங்கத்தின் செயற்குழுவும் கலைக்கப்பட்டது.மலையாள திரைப்பட நடிகை ஒருவருக்கு, நடிகர் திலீப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 2017ல் புகார் எழுந்தது. இது, மலையாள திரையுலகில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள், பாலின பாகுபாடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பட வாய்ப்புகள்
இந்த கமிட்டி சமர்ப்பித்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், மலையாள திரையுலகில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், இது நடிகையருக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.பட வாய்ப்புகளுக்காக பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், பெரிய நடிகர்கள் கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கை வெளியான பின், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகையர், தாங்கள் அனுபவித்த கொடுமைகளை வெளிப்படையாக கூற துவங்கியுள்ளனர்.பிரபல மலையாள நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.எல்.ஏ.,வுமான முகேஷ், நடிகர்கள் ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, சித்திக், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து விசாரிக்க ஏழு பேர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை, கேரள அரசு அமைத்துள்ளது. ராஜினாமா
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதை தொடர்ந்து, 'அம்மா' என்றழைக்கப்படும், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் நேற்று ராஜினாமா செய்தார். இது குறித்து சங்கம் வெளியிட்ட அறிக்கை:'அம்மா' சங்கத்தின் கமிட்டி உறுப்பினர்கள் சிலர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதற்கு தார்மீக பொறுப்பேற்று சங்கத்தின் செயற்குழுவை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய கமிட்டி அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, நடிகையும், மாடலுமான அஞ்சலி அமீர், நடிகர் சூரஜ் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மேலும் சில நடிகர்களும் பாலியல் புகார்களில் சிக்கலாம் என்பதால் கலக்கமடைந்துஉள்ளனர்.
சுரேஷ் கோபி ஆவேசம்!
மலையாள நடிகர்கள் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நடிகரும், மத்திய இணைஅமைச்சருமான சுரேஷ் கோபியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த அவர், ஆவேசமாக அளித்த பதில்:ஊடகங்களுக்கு தான் மிகப் பெரிய தீனி கிடைத்துள்ளது. இதை வைத்து நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், இந்த விவகாரம் நீதிமன்றத்தின் முன் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் உங்கள் சுய லாபத்துக்காக ஒருவருக்கொருவரை சண்டையிட செய்கிறீர்கள். சினிமா மீதான மக்களின் பார்வையையும் தவறாக வழிநடத்துகிறீர்கள்.இந்த புகார்கள் அனைத்துமே குற்றச்சாட்டுகள் வடிவில் தான் உள்ளன. இதில் தீர்ப்பு கூற நீங்கள் என்ன நீதிமன்றமா? இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தான் தீர்ப்பளிக்க வேண்டும். நீங்கள் அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.