பெங்களூரு : நடிகர் தர்ஷன் மீதான அபிமானத்தால், தங்கள் குழந்தைக்கு கைதி உடை அணிவித்து, போட்டோ ஷூட் நடத்திய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.தனக்கு நெருக்கமான பவித்ரா கவுடாவுக்கு, ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொந்தரவு கொடுத்தார் என்பதால், சித்ரதுர்காவின், ரேணுகாசாமியை கூலிப்படை வைத்து கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார் நடிகர் தர்ஷன். இந்த வழக்கில் தர்ஷன் கைதாகி, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவர் சிறையில் இருந்தாலும், ரசிகர்களிடம் செல்வாக்கு குறையவில்லை. பல நடிகர், நடிகையர் இவருக்கு மறைமுகமாகவும், பகிரங்கமாகவும் ஆதரவாக பேசுகின்றனர். தினமும் இவரை பார்க்க பலர் வருகின்றனர்.இந்நிலையில் இவரது ரசிகர்களான ஒரு தம்பதி, தர்ஷன் மீதான அன்பை வெளிப்படுத்தும் நோக்கில், தங்களின் ஆண் குழந்தைக்கு கைதியை போன்று உடை அணிவித்து, கைதி எண் கொடுத்து, கை விலங்கு படத்துடன், போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். இந்த போட்டோக்கள் சமூக வலைதளத்தில் பரவியுள்ளன.இதை பார்த்த, கர்நாடக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. போலீசார் மூலமாக குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க கோரிக்கை வைத்துள்ளது.சிறு குழந்தைகளுக்கு, கைதியை போன்று தோற்றத்தை ஏற்படுத்தி, போட்டோ ஷூட் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. போட்டோ ஷூட் நடத்திய குழந்தையின் பெற்றோரை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுப்போம்.- சசிதர் கோசம்பே, உறுப்பினர், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்