உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஈஸ்வரப்பா, வினய்குமார் டிபாசிட் இழந்த பரிதாபம்

ஈஸ்வரப்பா, வினய்குமார் டிபாசிட் இழந்த பரிதாபம்

பெங்களூரு, : 'சீட்' கிடைக்காத விரக்தியில் போட்டி வேட்பாளராக களமிறங்கிய ஈஸ்வரப்பா, வினய்குமார் ஆகிய இருவருமே டிபாசிட் தொகை இழந்தனர்.ஷிவமொகாவில் பா.ஜ., சார்பில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் ராகவேந்திரா, காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் பங்காரப்பா மகள் கீதா சிவராஜ்குமார் போட்டியிட்டனர்.

தோற்கடிப்பேன்

ஹாவேரியில் தன் மகன் காந்தேஷுக்கு, பா.ஜ.,வில் சீட் கிடைக்காத அதிருப்தியில், 'ராகவேந்திராவை தோற்கடிப்பேன்' என்று கூறி, முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா, ஷிவமொகாவில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். தொகுதியில் 13,72,949 ஓட்டுகள் பதிவாகின. நேற்று முன்தினம் நடந்த ஓட்டு எண்ணிக்கையில், ராகவேந்திரா 7,78,721 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார். கீதா சிவராஜ்குமார் 5,35,006 ஓட்டுகள் பெற்றார். பா.ஜ., வேட்பாளர் 2,43,715 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.ஆனால், போட்டி வேட்பாளராக களமிறங்கிய ஈஸ்வரப்பா வெறும் 30,050 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். ஒரு வேட்பாளர் டிபாசிட் தொகை திரும்ப பெறுவதற்கு, பதிவான ஓட்டுகளில், ஆறில் ஒரு பங்கு பெற வேண்டும். ஆனால், அவர் அந்த அளவுக்கு ஓட்டுகள் பெறாததால், டிபாசிட் தொகை இழந்தார்.இதுபோன்று, தாவணகெரேவில் பா.ஜ., சார்பில் முன்னாள் எம்.பி., சித்தேஸ்வர் மனைவி காயத்ரி சித்தேஸ்வர், காங்கிரஸ் சார்பில் அமைச்சர் மல்லிகார்ஜுன் மனைவி பிரபா மல்லிகார்ஜுன் போட்டியிட்டனர். காங்கிரசில் சீட் கிடைக்கவில்லை என்பதற்காக, அக்கட்சியின் மாநில செயலர் வினய்குமார், சுயேச்சையாக போட்டியிட்டார்.ஓட்டு எண்ணிக்கையில், பிரபா மல்லிகார்ஜுன் 6,33,059 ஓட்டுகள் பெற்றார். காயத்ரி சித்தேஸ்வர் 6,06,965 ஓட்டுகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் 26,094 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.போட்டி வேட்பாளராக களமிறங்கிய வினய்குமார், 42,907 ஓட்டுகள் பெற்று, டிபாசிட் தொகையை இழந்தார்.

418 சுயேச்சைகள்

கர்நாடகாவில் முதல் கட்டமாக ஏப்., 26ல் நடந்த தேர்தலில் 226 ஆண்கள், 21 பெண்கள் என 247 பேரும்; இரண்டாம் கட்டமாக மே 7ல் நடந்த தேர்தலில், 206 ஆண்கள், 21 பெண்கள் என 227 பேர் போட்டியிட்டனர்.இதில், 17ல் பா.ஜ., 9ல் காங்கிரஸ், 2ல் ம.ஜ.த., பெற்றன. மூன்று கட்சிகளிலும் மொத்தம் 56 பேரும்; சுயேச்சைகள் 418 பேரும் போட்டியிட்டனர். சுயேச்சையாக போட்டியிட்ட ஈஸ்வரப்பா, வினய் குமார் உட்பட 418 பேரும் டிபாசிட் இழந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ