மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீடு மீது குண்டு வீசி தாக்குதல்
இம்பால், மணிப்பூர் முன்னாள் முதல்வர் மைரம்பம் கொய்ரெங் வீட்டின் மீது பயங்கரவாதிகள் குண்டு வீசியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் காயமடைந்தனர்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே இடஒதுக்கீடு தொடர்பாக கடந்தாண்டு பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த பிரச்னை இன்னும் முழுமையாக தீரவில்லை. இரு தரப்பிலும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்கின்றன.இந்நிலையில், இம்பால் அருகே உள்ள சூரசந்த்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதியில் இருந்து கீழே உள்ள த்ரோங்லாபி கிராம குடியிருப்பு பகுதி மீது ராக்கெட் லாஞ்சர் உதவியுடன், நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.த்ரோங்லாபிக்கு அருகே உள்ள கும்பி கிராமத்தில் நேற்று, பல ட்ரோன்கள் 100 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் பறந்துள்ளன. இதனால் அந்த கிராமத்தினர் பீதியடைந்தனர்.இதற்கிடையே பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ராங் பகுதியில் முன்னாள் முதல்வர் மைரம்பம் கொய்ரெங் வீட்டு வளாகத்தின் உள்ளே நேற்று இரவு ராக்கெட் குண்டு வந்து விழுந்தது. அப்போது அங்கு இருந்த முதியவர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். 13 வயது சிறுமி உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.
மனித சங்கிலி போராட்டம்
மணிப்பூரில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் வாயிலாகநடத்தப்பட்ட தாக்குதலில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்களை அரசு தடுக்க தவறியதாக கூறி மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், பெண்கள் என பலர் பங்கேற்றனர். 'கூகி ஆயுதக்குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்' போன்ற பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.