ஆந்திராவில் ஒரே நேரத்தில், சட்டசபை, லோக்சபா தேர்தல் நடப்பதால், கர்நாடக பா.ஜ., தலைவர்கள் பிரசார ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளனர்.ஆந்திராவில் வரும் 13ம் தேதி லோக்சபா தேர்தலுடன், சட்டசபைக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. அங்கும் பிரசாரம் அனல் பறக்கிறது. ஆந்திரா, பல்நாடு மாவட்டத்தின் சிலகோரிபேட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது.இதில் அங்குள்ள தலைவர்கள் குளறுபடி செய்தனர். மைக் வசதி சரியாக இல்லை; கூட்டத்துக்கு வந்த மக்களுக்கு தேவையான வசதிகள் செய்யவில்லை. இதனால் மேலிடத் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.ஆனால் கர்நாடகாவில், பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டங்களுக்கு, பா.ஜ., தலைவர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். எந்த குறைகளும் இல்லை. பிரதமர் அலுவலகம் இதை கவனித்தது. ஆந்திராவில் நடக்கும் பிரதமர் மோடியின் இரண்டாம் கட்ட பிரசாரத்துக்கு ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பை, கர்நாடக தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளது.முன்னாள் அமைச்சர்கள் சுதாகர், அஸ்வத் நாராயணா, எம்.பி., மோகன், எம்.எல்.ஏ.,க்கள் முனிரத்னா, விஸ்வநாத், கேசவபிரசாத், கட்சியின் முன்னாள் பொதுச்செயலர் சித்தராஜு ஆகியோர் அடங்கிய குழுவினர், ஆந்திராவில் பிரசார பொறுப்பை ஏற்றுள்ளனர். இன்றும், மே 8ம் தேதியும் ஆந்திராவில் நடக்கும் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ, மேடை அமைப்பது என அனைத்து ஏற்பாடுகளையும் செய்வர்.கர்நாடகாவில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. எனவே வேறு மாநிலங்களுக்கு பிரசாரம் செய்ய செல்லும்படி, பா.ஜ., மேலிடம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பீஹாருக்கும், மத்திய அமைச்சர் ஷோபா உத்தரபிரதேசத்துக்கும், பகவந்த் கூபா, நளின்குமார் கட்டீல், அன்னா சாஹேஹப் ஜொல்லே, உமேஷ்ஜாதவ், அரவிந்த் லிம்பாவளி, கேப்டன் பிரிஜேஷ் சவுடா மஹாராஷ்டிராவுக்கும், முனிசாமி தெலுங்கானாவுக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.ராஜிவ் சந்திரசேகர், தேஜஸ்வி சூர்யாவுக்கும் கூட முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.