| ADDED : ஜூலை 10, 2024 01:59 AM
புதுடில்லி:தெற்கு ரிட்ஜ் சத்பரியில் அனுமதியின்றி 1,100 மரங்கள் வெட்டப்பட்ட இடத்தை உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு செய்தது.துணைநிலை கவர்னர் சக்சேனாவின் வாய்மொழி உத்தரவுப்படி தெற்கு ரிட்ஜ் சத்பரியில் டில்லி மேம்பாட்டு ஆணையம் 1,100 மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர்கள் பரத்வாஜ், அதிஷி சிங் மற்றும் இம்ரான் ஹுசைன் ஆகியோர் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழு சத்பரியில் நேற்று ஆய்வு செய்தது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ், “வெட்டப்பட்ட மரங்களை அகற்றும் பணிகள் நடக்கின்றன. இங்கு சாலை அமைக்க அருகில் உள்ள பண்ணை வீடுகளின் நிலத்தை கையகப்படுத்தியிருக்கலாம். ஆனால் டில்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் முறையாக அனுமதி பெறாமல் தன்னிச்சையாக வனப்பகுதியில் உள்ள 1,100 மரங்களை வெட்டியுள்ளனர்,”என்றார். வருவாய்த் துறை அமைச்சர் அதிஷி, “அதிகாரிகள் உண்மையை மறைக்கும் நோக்கில் இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்படும் கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்க்கின்றனர். இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். மேலும், விசாரணைக்கு உத்தரவிடப்படும்,”என்றார்.இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் பா.ஜ., தலைவர்கள் சில ஆவணங்களைக் காட்டி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் ஆகியோரின் ஒப்புதலுக்குப் பிறகே மரங்கள் வெட்டப்பட்டன என கூறியிருந்தனர்.