பெங்களூரு : போலி ஆவணங்களை உருவாக்கி, மூதாட்டி வீட்டின் மீது கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்கியது தொடர்பாக, ஐவர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு, ஜெயநகரின் ஆறாவது ஸ்டேஜில் வசிப்பவர் அம்புஜாக்ஷி நாகரகட்டி, 75. கனரா வங்கியில் பணியாற்றிய இவர், விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார். ஜெ.பி.நகர் ஆறாவது ஸ்டேஜில், பி.டி.ஏ.,விடம் வீட்டுமனை வாங்கினார். 1,350 சதுர அடி பரப்பளவில் வீடும் கட்டியுள்ளார்.இவரது மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். மகனுடன் வசிக்க விரும்பிய அம்புஜாக்ஷி, வீட்டை விற்க முடிவு செய்து, அக்கம், பக்கத்தினரிடம் சொல்லி வைத்தார். சமீபத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மஞ்சுநாத், தன் நண்பர் பாஸ்கர் கிருஷ்ணாவை அறிமுகம் செய்து, அவர் வீட்டை வாங்க விரும்புவதாக கூறினார். இது தொடர்பாக, அம்புஜாக்ஷி, பாஸ்கர் கிருஷ்ணாவிடம் பேசினார். வீட்டை வாங்குவதாக கூறி, 10,000 ரூபாய் முன்பணம் கொடுத்தார். வீட்டை வாங்க அரசிடம் அனுமதி பெற வேண்டும் என, வீட்டின் பத்திர நகல்களை வாங்கினார்.சில நாட்களுக்கு பின், பாஸ்கர் கிருஷ்ணா, தன் நண்பர்கள் மகேஷ் உட்பட, சிலரை வங்கி அதிகாரிகள் போன்று, அம்புஜாக்ஷி வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டை வாங்க எனக்கு வங்கியில் கடன் தேவைப்படுகிறது. எனவே, உங்களின் கையெழுத்து வேண்டும் என கேட்டனர். அம்புஜாக்ஷி வங்கியில் பணியாற்றியவர் என்பதால், அவர்களின் மோசடியை புரிந்து கொண்டார். என் வீட்டை உங்களுக்கு விற்க முடியாது என, கூறி அனுப்பி விட்டார். அதன்பின் வேறு சிலர் வீட்டை வாங்க முன் வந்த போதுதான், இவரது வீட்டின் மீது போலி ஆவணங்களை உருவாக்கி, பாஸ்கர் கிருஷ்ணாவும், அவரது கூட்டாளிகளும் வெவ்வேறு வங்கிகளில் 3.85 கோடி ரூபாய் கடன் பெற்றிருப்பது, வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக, ஜெ.பி.நகர் போலீஸ் நிலையத்தில், அம்புஜாக்ஷி புகார் அளித்தார். விசாரணை நடத்திய சி.சி.பி., போலீசார், ஐந்து பேரை கைது செய்தனர். மோசடியில் மேலும் இருவருக்கு தொடர்புள்ளது. அவர்களை போலீசார் தேடுகின்றனர். ***