பெங்களூரு: பெட்ரோல், டீசலை தொடர்ந்து குடிநீர், பஸ், மருத்துவ கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கை கட்டணத்தை உயர்த்த, அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்; பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை; அன்ன பாக்யா திட்டத்தின் கீழ், 10 கிலோ இலவச ரேஷன் அரிசி; 200 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்தினால் இலவச மின்சாரம்; வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை என, ஐந்து வாக்குறுதித் திட்டங்களை அரசு அமல்படுத்தி உள்ளது.இதில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகை தவிர, மற்ற நான்கு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து வாக்குறுதித் திட்டங்களையும் செயல்படுத்த ஆண்டுக்கு 56,000 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.இந்நிலையில், வாக்குறுதித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாமல், அரசு கடந்த சில மாதங்களாகவே திணறி வருவதாக சொல்லப்படுகிறது.வாக்குறுதித் திட்டங்களை தடையின்றி செயல்படுத்துவதற்காக, அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தை ஆலோசகராக அரசு நியமித்துள்ளது.வாக்குறுதித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பணம் சேகரிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலையை சமீபத்தில் மாநில அரசு உயர்த்தியது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.இந்நிலையில் மக்களுக்கு மேலும் சில அதிர்ச்சி கொடுக்க, அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.அதாவது குடிநீர், பஸ், மருத்துவ கல்லுாரிகள் மாணவர் சேர்க்கை, ஆட்டோ கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.காவிரி குடிநீர் கட்டணத்தை அரசு உயர்த்தி, பல ஆண்டுகள் ஆகிவிட்டது. வரும் நாட்களில் குடிநீர் கட்டணம் 10 முதல் 40 சதவீதம் வரை உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது. ஆட்டோ கட்டணம் 25 சதவீதம், பி.எம்.டி.சி., மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் கட்டணம் 20 முதல் 25 சதவீதம், அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் தனியார் மருத்துவமனை கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை கட்டணத்தை 10 முதல் 15 சதவீதம் உயர்த்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.