உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் மீது மேலும் ஒரு புகார் விசாரணைக்கு கவர்னர் உத்தரவு?

முதல்வர் மீது மேலும் ஒரு புகார் விசாரணைக்கு கவர்னர் உத்தரவு?

பெங்களூரு, 'மூடா'வில் நடந்த மற்றொரு முறைகேட்டிலும் முதல்வர் சித்தராமையாவுக்கு தொடர்பு இருப்பதாக, மைசூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், கர்நாடக கவர்னரிடம் புகார் அளித்துள்ளார். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்ட விவகாரம், மாநில அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.'உங்கள் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது' என கேட்டு, முதல்வருக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசை வாபஸ் பெற வேண்டும் என, கர்நாடக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.முறைகேடுக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவி விலகக்கோரி, எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த.,வினர் பெங்களூரு முதல் மைசூரு வரை பாதயாத்திரை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா என்பவர், 'மூடா'வில் மற்றொரு முறைகேட்டில் முதல்வர் ஈடுபட்டிருப்பதாகக் கூறி, ஆவணங்களுடன் கவர்னரை நேற்று சந்தித்து புகார் அளித்தார்.அதில், 'மைசூரு வருணா தொகுதிக்கு உட்பட்ட உத்தனஹள்ளியில், ஆஷ்ரியா வீட்டு வசதி திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டிக்கொள்ள 1979ல் 1.39 ஏக்கர் நிலத்தை மூடா ஒதுக்கியிருந்தது. 'ஆனால், போலி ஆவணங்களை உருவாக்கி இந்த 1.39 ஏக்கர் நிலம், 2023ல் முதல்வர் சிபாரிசு கடிதத்தின்படி, மாரப்பா என்பவர் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் முதல்வருக்கு தொடர்பு இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரியுள்ளார்.சமூக ஆர்வலர் ஆபிரஹாமும் நேற்று கவர்னரை சந்தித்து, முதல்வருக்கு எதிரான மேலும் சில ஆவணங்களை வழங்கினார். இதனால், 'மூடா' முறைகேடு விவகாரத்தில், முதல்வர் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு கவர்னர் அனுமதி அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
ஆக 07, 2024 06:19

சித்த ராமையாவை கருநாடக கருணா என்று நான் ஆரம்பத்தில் இருந்து விமரிசித்து வந்துள்ளேன் , இவன் பிடிபடாத மிகப்பெரிய முதலை, இவனை அங்குசம் வைத்து கட்டிபோட்டுள்ளது zameer என்ற பாகன் தான்


Kasimani Baskaran
ஆக 07, 2024 05:34

அரசாங்கத்துக்கு மூன்று கோடு போட காங்கிரஸ் காரர்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.. சில நேரங்களில் இவர்கள் தீம்காவுக்கே பாடம் எடுக்கும் அளவுக்கு நிபுணர்கள் என்பது வெளிப்பட்டு விடுகிறது.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ