உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.பி.எல்., விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு; சுகாதாரத்துறை உத்தரவு

ஐ.பி.எல்., விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு; சுகாதாரத்துறை உத்தரவு

புதுடில்லி; ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் மது மற்றும் சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் கோல்கட்டா மற்றும் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன.இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை சார்பில் ஐ.பி.எல்., தலைவர் அருண் சிங் துமாலுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், கிரிக்கெட் போட்டிகளின் போது, மது மற்றும் சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில்; தொற்று அல்லாத நோய் பாதிப்புகள் இந்தியாவில் அதிகரித்தே காணப்படுகின்றன. புற்றுநோய், நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் ஆண்டுக்கு 70 சதவீத உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. புகையிலை பொருட்களும், மதுவும் தொற்றில்லா நோய்களை உருவாக்கும் முக்கிய காரணிகளாகும். உலகளவில் புகையிலைப் பொருட்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 14 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியின்போது, நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வகையிலும் மது, புகையிலைப்பொருட்கள் தொடர்பான விளம்பரம் வெளியிடக்கூடாது.ஐ.பி.எல்., தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும், நடக்கும் வளாகங்களிலும் மது, புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது.மது, புகையிலைப்பொருட்களுக்கு விளம்பரம் செய்யக்கூடாது என்று விளையாட்டு வீரர்கள், வர்ணனை செய்வோருக்கு அறிவுறுத்த வேண்டும். ஆரோக்கியம் மற்றும் சுகாதாரமான வாழ்க்கை முறையில் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக கிரிக்கெட் வீரர்கள் இருக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சுந்தர்
மார் 10, 2025 18:05

மது வகைகள் ப்ராண்டில் தண்ணீர், சோடா விளம்பரங்களும் பான் பராக் பாக்கட் ப்ராண்டில் ஏலக்காய் பாக்கட் விளம்பரங்களும் வருகின்றன...


கோபாலன்
மார் 10, 2025 17:15

11 circle போன்ற சூதாட்ட கம்பெனிகள் தான் இப்போது கிரிக்கெட் விளையாட்டு நடத்துகின்றனர். ஆன்லைன் விளையாட்டுகள், லாட்டரி, ஆன்லைன் ரம்மி, சினிமா, டாஸ்மாக் மது, கள்ள சாராயம், கஞ்சா ஆகியவை எல்லாம் மக்களை உறிஞ்சி எடுக்கின்றன.


theruvasagan
மார் 10, 2025 16:27

ஐபிஎல்லே ஒரு சூதாட்டம். அதையே தடை செய்யலாம். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் உருப்படும்


தத்வமசி
மார் 10, 2025 15:16

ஐபிஎல் என்பது பணக்காரர்களால் மத்திய தர மக்களின் மீது திணிக்கப்படும் ஒரு வியாதி. வியாபாரம் இதன் நோக்கம். சில மது கம்பெனிகளின் விளம்பரங்கள் தடுக்கப்பட்டன. ஆனால் அதுவே க்ளப் சோடா என்ற பெயரில் அந்த கம்பெனிகளின் விளம்பரங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒரு பக்கம் இந்த விளம்பரம் என்றால் மறு பக்கம் டாஸ்மாக். குடிகாரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பொது இடங்களில் பயணிக்கும் போது டாஸ்மாக் வாடை தாங்க முடியவில்லை.


Oru Indiyan
மார் 10, 2025 14:57

ஐ பி எல் இன்னொரு திருடர் கட்சி. பல கோடி ஊழல். சில வருடங்கள் முன்பு சி எஸ் கே தலைவர் ஊழலில் மாட்டி சி எஸ் கே இரண்டு வருடங்கள் ஆடவில்லை. டோனி என்ன நல்லவரா? ஜி விளம்பரத்தில் நன்கு சம்பாதித்து மருமகனுடன் சேர்ந்து கோடிகளில் புரள்கிறார்


V Venkatachalam
மார் 11, 2025 13:21

ஜி சதுரம் ஒரு ப்ராடு கம்பெனியாச்சே.. தோனிக்கு ஒழுங்காக பணம் கொடுக்கிறான்களா? அவனுங்க பிளாட் டெவலப்மெண்ட் செலவு எல்லாவற்றையும் சி எம் டி ஏ தலையில் கட்டி விட்டு லாபத்தையும் சுருட்டுறவன்களாச்சே..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை