ஹோண்டா இந்தியா புதிய தலைவர் டக்காஷி நக்கஜிமா
புதுடில்லி, 'ஹோண்டா கார்ஸ் இந்தியா' நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, டக்காஷி நக்கஜிமா நியமிக்கப்பட்டுள்ளார். அவர், ஏப்ரல் முதல் தன் பணியை துவங்குவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது, இந்த பதவியில் இருக்கும் டக்குயா சுமுராவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைவதால், ஜப்பானில் உள்ள ஹோண்டா தலைமை அலுவலகத்துக்கு அவர் திரும்புவார் என கூறப்பட்டுள்ளது. இவர், தன் மூன்று ஆண்டு பதவிக் காலத்தில், இந்தியாவில், ஹோண்டாவின் முதல் ஹைபிரிட் காரான ஹோண்டா சிட்டி இ - எச்.இ.வி., காரை அறிமுகப்படுத்தினார். புதிதாக இப்பதவியை ஏற்க இருக்கும் டக்காஷி நக்கஜிமா, கடந்த 30 ஆண்டுகளாக ஹோண்டா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஜப்பான், சீனா, ஸ்பெயின், செக் குடியரசு மற்றும் ரஷ்ய சந்தைகளில், வெவ்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார். தற்போது, இவர் ஹோண்டா மோட்டார் ரஷ்யா நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.