மாண்டியா: மனைவி தற்கொலை செய்து கொண்டதால், பீதியடைந்து கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.மாண்டியா, கே.ஆர்., பேட்டின், கெத்த ஹோசூரு கிராமத்தில் வசித்தவர் மோகன், 26; விவசாயி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவருக்கும், ஸ்வாதி, 21, என்பவருக்கும் திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.சில மாதங்களாக குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதிக்கு இடையே அவ்வப்போது சண்டை நடந்தது. கணவர் வீட்டினர் தன்னை கொடுமைப்படுத்துவதாக, தன் பெற்றோரிடம் ஸ்வாதி கூறி வருந்தினார்.குடும்பத்தின் மூத்தவர்கள் சேர்ந்து, சமாதானம் செய்து ஒற்றுமையுடன் வாழும்படி தம்பதிக்கு புத்திமதி கூறினர். இதற்கிடையில் நேற்று முன் தினம் இரவு, ஸ்வாதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை தகவல் அறிந்த பெற்றோர், கெத்த ஹோசூருக்கு வந்தனர். மருமகனும், அவரது பெற்றோரும் வீட்டில் இல்லை.மோகன் குடும்பத்தினர், தங்கள் மகளை வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தி, கொலை செய்ததாக கிக்கேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, மோகனின் குடும்பத்தினரை தேடினர்.கிராமத்தின் ஏரியில், மோகனின் சடலம் மிதப்பது நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. மனைவி தற்கொலை செய்து கொண்டதால், போலீசாருக்கு பயந்து ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது, விசாரணையில் தெரிந்தது.இந்த சம்பவத்தால், கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.