ரேவண்ணாவிடம் விசாரிக்க ஐகோர்ட் தடை
பெங்களூரு: வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணாவிடம் விசாரிக்க, கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.ஹாசன் ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. இவர் தனது வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவானது.தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரேவண்ணா மனுத் தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி நாகபிரசன்னா விசாரிக்கிறார். நான்கு நாட்களுக்கு முன், ரேவண்ணா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.நேற்று, மனு மீது விசாரணை நடந்தது. ரேவண்ணா தரப்பு வக்கீல் நாகேஷ் வாதாடுகையில், ''என் மனுதாரர் மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்ததாக கூறப்படுவது, நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய புகார். ''அதற்கு தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பழைய புகாருக்கு, இப்போது போடப்பட்டு உள்ள பிரிவுகள் பொருந்தாது. இதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.அரசு வக்கீல் ரவிவர்வகுமார் வாதாடுகையில், ''வழக்கு தொடர்பாக முழு விசாரணை நடத்தி, போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். வழக்கை ரத்து செய்யும்படி கேட்பது சரியல்ல,'' என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, மனு மீதான விசாரணையை, அடுத்த மாதம் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை, வழக்கு தொடர்பாக, ரேவண்ணாவிடம் விசாரிக்க இடைக்கால தடை விதித்தார்.