உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோசாலையில் தயாராகும் சிலைகள்

கோசாலையில் தயாராகும் சிலைகள்

பீதர்: விநாயகர் சதுர்த்திக்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த சிலைகள் பசுவின் சாணம் மற்றும் கோமியத்தால் தயாரிக்கப்பட்டவை.பீதரின் நாரோகா கிராமத்தில் காமதேனு கோசாலை உள்ளது. இந்த கோசாலையை சிவானந்த சிவாச்சார் அறக்கட்டளை நிர்வகிக்கின்றனர்.

ஆர்டர்கள்

இங்கு பசுவின் சாணம், கோமியம் பயன்படுத்தி, கலைப்பொருட்கள், கடவுள் சிலைகள் என, பலவிதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.ஆண்டுதோறும் இங்கு தயாரிக்கப்படும் இயற்கை விநாயகர் சிலைகள், மிகவும் பிரபலம். இங்கிருந்து, பல்வேறு மாவட்டங்களுக்கும் சிலைகள் அனுப்பப்படுகின்றன. பண்டிகைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே ஆர்டர் வந்துள்ளது.கோசாலை நிர்வாகி சிவகுமார் ஹிரேமத் கூறியதாவது:சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில், இயற்கையான முறையில் தயாரான விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கோசாலையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பதால், கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

130 சிலைகள்

இரண்டு ஆண்டுகளாக, விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. சிலை தயாரிப்பு குறித்து, பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மிகவும் நுணுக்கமான கைவண்ணத்தில் தயாரிக்க வேண்டும் என்பதால், 25 சிலைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. இம்முறை 130 சிலைகளை தயாரிக்கிறோம். ஏற்கனவே 100 சிலைகள் தயார் நிலையில் உள்ளன.கோசாலையில் இரண்டு அங்குலம் முதல் 11 அங்குலம் வரையிலான சிலைகள் கிடைக்கின்றன. இரண்டு அங்குலம் சிலை 50 ரூபாய்; நான்கு அங்குலம் சிலை 100 ரூபாய்; ஆறு அங்குலம் சிலை 250 ரூபாய்; 11 அங்குலம் சிலையின் விலை 400 ரூபாய்.எந்த ரசாயனமும் கலக்காமல், பசுவின் சாணம், கோமியம் பயன்படுத்தி சிலை தயாரிக்கப்படுகிறது. இது தண்ணீரில் கரையும். கரைத்த பின் உரமாக பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி